சமூக வலைதளங்களில் முறையற்ற பதிவுகள்.. மெட்டா மீது எஃப்ஐஆர் பதிவு செய்த டெல்லி காவல்துறை!

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது சமூக வலைதளப் பக்கங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான சட்டவிரோதப் புகைப்படங்கள் பகிரப்பட்டதைத் தடுக்கத் தவறியதாக மெட்டா நிறுவனம் மீது டெல்லி காவல்துறை அதிகாரப்பூர்வமாக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்த உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இணையதளப் பக்கங்களில் பரப்பப்படும் இத்தகைய ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான பதிவுகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதில் மெட்டா நிறுவனம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, விளம்பரங்கள் வாயிலாகப் பயனாளர்களை வெளித்தளங்களுக்கு அழைத்துச் சென்று இத்தகைய குற்றச் செயல்கள் ஊக்குவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஆணையம் தலையிட்டு வழக்குப் பதிவு செய்ய அறிவுறுத்தியது.

சமூக ஊடகங்களைப் பாதுகாப்பான முறையில் பராமரிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த எஃப்ஐஆர் தெளிவுபடுத்தியுள்ளது. இணைய வழிக் குற்றப்பிரிவு அதிகாரிகள் இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.