குடும்பப் பிரச்சனையால் வந்த பொய் புகாரா? நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில் நள்ளிரவில் 15 போலீசார் ரைட்!

மிஸ்டர் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்று, பிரபல ரியாலிட்டி ஷோ மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி, தற்போது ‘ஃபயர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகராக வலம் வரும் பாலாஜி முருகதாஸின் வீட்டில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனை தமிழ் திரைவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15 போலீசார் நடத்திய நள்ளிரவு ரைட்!

சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட ஒரு புகாரின் அடிப்படையில், சென்னை மாநகரத்தில் உள்ள பாலாஜி முருகதாஸின் அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த சுமார் 15 போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். பாலாஜி வீட்டில் அடிக்கடி போதை விருந்துகள் நடப்பதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், நீண்ட நேரம் சமையலறை டப்பாக்கள் வரை நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், பாலாஜி முருகதாஸின் வீட்டில் போதைப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், சில மதுபாட்டில்கள் மட்டுமே இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் விஜய்க்கு பாலாஜி நேரடி சவால்!

தன் வீட்டில் நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனை குறித்து வேதனை அடைந்த நடிகர் பாலாஜி முருகதாஸ், தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “என் வீட்டில் நான் வளர்க்கும் 3 பூனைகளும் 1 நாயும் தவிர போலீசார் தேடி வந்த போதைப்பொருள் எதுவும் கிடைக்கவில்லை. முறையான வாரண்ட் இல்லாமல் பண்டிகை நாளில் 15 போலீசாரை அனுப்பி சோதனை நடத்துவது காவல் துறைக்கே அசிங்கமாக இல்லையா?” என்று சாடினார்.

மேலும், தமிழகத்தின் முதலமைச்சர் விஜயை நேரடியாக டேக் செய்து கேள்வி எழுப்பிய பாலாஜி, “நான் என் வாழ்நாளில் எந்த ஒரு போதைப்பொருளையும் பயன்படுத்தியதே இல்லை. வேண்டுமானால் உடனே இரத்த பரிசோதனை செய்து கொள்ள கூட தயார்” எனப் போலீசாருக்குச் சவால் விடுத்துள்ளார். யாரோ கொடுத்த பொய்ப் புகாரை நம்பி தன்னை பொதுவெளியில் அவமானப்படுத்த முயற்சி நடப்பதாகக் கூறியுள்ள அவர், தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியவர் யார் என்பதை உறுதிசெய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார்.