போரும் இல்லை… சமாதானமும் இல்லை! மத்திய கிழக்கில் உருவாகியுள்ள புதிய ஆபத்தான யதார்த்தம் என்ன?

அமெரிக்க இடைத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் வளைகுடா நாடுகளின் தொடர் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, ஈரான் மீதான நேரடி இராணுவத் தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இந்தத் திடீர் முடிவு சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 90 டாலருக்கும் கீழே சரிந்துள்ளது. கடந்த அக்டோபர் இறுதியில் 118 டாலராக இருந்த விலை, தற்போது 20 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹோர்முக்ஸ் ஜலசந்தியும் மறைமுகச் செலவுகளும்!

மத்திய கிழக்கில் முழு அளவிலான போர் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டாலும், ஹோர்முக்ஸ் ஜலசந்தி பகுதியில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் இன்னும் முழுமையாக ஓயவில்லை. போரின் தொடக்கத்திலிருந்து இதுவரை 130-க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வளைகுடா நாடுகளைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளர்கள், அமெரிக்கக் கடற்படையின் பாதுகாப்புடன் குறுகிய பாதைகள் வழியாகக் கப்பல்களை இயக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தச் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் மாற்றுப் பாதைக் கையாளுதல்கள் மூலம் கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தாலும், கப்பல் கட்டணமும் காப்பீட்டுச் செலவுகளும் போருக்கு முந்தைய காலகட்டத்தை விட பமடங்கு அதிகரித்துள்து. இந்த கூடுதல் நிதிச் சுமையால் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன.

புதிய ஆபத்தான யதார்த்தம்!

“போரும் இல்லை, சமாதானமும் இல்லை” என்ற இந்த நிலையற்ற சூழல் உலகளாவிய பொருளாதாரத்திற்கு நீண்ட கால அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தற்காலிகமாகச் சரிந்தாலும், சர்வதேச வர்த்தகப் பாதைகள் ஆபத்தானதாகவும், காப்பீட்டுச் செலவுகள் உச்சத்திலும் தொடர்வது எரிசக்தி கட்டமைப்பை நிரந்தர மிரட்டலுக்குள்ளாக்குகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மீதான பிடிவாதமும், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை நெருக்கடிகளும் தீர்க்கப்படாத வரை, உலக நாடுகள் இந்த விலை மற்றும் பாதுகாப்பு விளிம்பு நிலையோடு வாழப் பழக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.