டொனால்ட் டிரம்பின் தாக்குதல் எச்சரிக்கை! ஈரானில் கிளம்பிய அணு கதிர்வீச்சு பீதியும் அதிகாரப்பூர்வ உண்மையும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்கள் குறித்துக் காரசாரமான எச்சரிக்கைகளை விடுத்து வரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய அணு உலை மையங்களுக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு கதிர்வீச்சு தடுப்பு ‘அயோடின் மாத்திரைகள்’ (Potassium Iodide) விநியோகிக்கப்படுவதாகச் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனினும், இந்தத் தகவல்களை ஈரானிய சுகாதார அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், இதுபோன்ற பொறுப்பற்ற செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

சர்வதேச ஊடகங்களின் தகவலும் ஈரான் மறுப்பும்!

பிரபல சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ஈரானின் பிக்ஏக்ஸ் மலைப் பகுதி மற்றும் புஷெர் அணு உலைகளை சுற்றியுள்ள 2 முதல் 3 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்குப் பொட்டாசியம் அயோடின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் தாக்குதல் அச்சம் காரணமாகவே முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஒரு அதிகாரி கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.

ஆனால், இந்தச் செய்திகளுக்கு ஈரானின் சுகாதார அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு மையத் தலைவர் ஹொசைன் கெர்மான்பூர் (Hossein Kermanpour) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் (X) தளத்தில் அவர் பதிவிட்ட அறிக்கையில், “எங்கள் அமைப்பைச் சேர்ந்த எந்தவொரு அதிகாரியும் வெளிநாட்டு ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கவில்லை. ஊடகங்களில் வெளியான மேற்கோள்கள் முற்றிலும் பொய்யானவை. நாட்டின் சுகாதாரத் துறை எந்தவொரு எதிரியின் அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளது; ஆனால், போர்ச் சூழலை அறிவிப்பது சுகாதார அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

அயோடின் மாத்திரைகளின் மருத்துவ உண்மை என்ன?

அணு உலை விபத்து அல்லது கதிர்வீச்சு பாதிப்புகள் ஏற்படும் வேளையில், மனித உடலின் தைராய்டு சுரப்பியைப் (Thyroid Gland) பாதுகாப்பதற்காகவே இந்த பொட்டாசியம் அயோடின் மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. கதிர்வீச்சினால் வெளியாகும் கதிரியக்க அயோடினைத் தைராய்டு சுரப்பி உறிஞ்சுவதைத் தடுக்கும் அரணாக மட்டுமே இம்மாத்திரைகள் செயல்படும்.

மாறாக, அணு ஆயுத வெடிப்பு அல்லது ஒட்டுமொத்த கதிர்வீச்சு பாதிப்புகளிலிருந்து மனித உடலை நேரடியாகக் காக்கும் ஆற்றல் இம்மாத்திரைகளுக்குக் கிடையாது என்பதும், இது பொதுவான ஆபத்துக்கான அறிகுறி அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.