மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்திற்குள்ளேயே மனித உயிர்கள் பறிபோகும் அவல நிலை தொடர்வதை வன்மையாகக் கண்டித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், சினிமா படங்களுக்கு டாப்-10 வரிசைப்படுத்துவது போல, தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு வரிசை வகுக்கும் அளவிற்கு மாநிலத்தின் நிலைமை மோசமடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரத்தில் காவல்துறையினரால் துப்பு துலக்க முடியாத நிலையையும், மறுபுறம் மதுரை தணிஷ்க் நகைக்கடை கொள்ளை மற்றும் காஞ்சிபுரம் டாஸ்மாக் பணக் கொள்ளை போன்ற தொடர் குற்றச் சம்பவங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திரைப்படங்களாக இருந்திருந்தால் குற்றவாளிகளைப் பாலத்தில் கட்டித் தொங்கவிட்டு ‘மாஸ் பிஜிஎம்’ போட்டிருப்பார்கள் என்று தவெக அரசை அவர் கிண்டலடித்துள்ளார்.
நேற்றைய தினம் பண்ருட்டி காவல் நிலையத்திலும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள அவர், காவல்துறை கண்காணிப்பு வளையத்திற்குள் தொடரும் இந்த மரணங்கள் முதல்வர் விஜய்யின் காதுகளுக்கு எட்டுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, குறைந்தபட்சம் அரசின் தரப்பிலிருந்து ஆறுதலும் வரவில்லை என்று விமர்சித்துள்ள அவர், நிர்வாகப் பொறுப்பு என்றால் என்னவென்றாவது முதலமைச்சருக்குத் தெரியுமா என்று காட்டமான கேள்வியை முன்வைத்துள்ளார். எதிர்க்கட்சியின் இந்த அதிரடித் தாக்குதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.