சென்னையில் மற்றொரு வரலாற்றுத் திரையரங்கம் மூடல்! அண்ணா தியேட்டர் இடித்துத் தரைமட்டம்!

சென்னையின் இதயப் பகுதியான அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடு) பல தசாப்தங்களாக இயங்கி வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அண்ணா திரையரங்கம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ள செய்தி திரையுலகினரையும் சினிமா ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. 1980-களில் சென்னை மக்களின் வார இறுதி பொழுதுபோக்கு மையமாகத் திகழ்ந்த மவுண்ட் ரோடு சினிமா கலாச்சாரத்தின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இந்த அண்ணா திரையரங்கம் விளங்கின.

தேவி, சாந்தம், ஆனந்த், சபையர் போன்ற பிரம்மாண்ட திரையரங்க வளாகங்களுக்கு மத்தியில், சுமார் 300 ஆசனங்களைக் கொண்ட எளிய ஒற்றைத்திரை (Single-screen) திரையரங்கமாக அண்ணா திரையரங்கம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. 80 மற்றும் 90-களின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்குப் பெயர் பெற்ற இந்தத் திரையரங்கம், சென்னை நகரின் சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்தது.

கடந்த சில தசாப்தங்களாகப் நவீன மல்டிபிளக்ஸ் (Multiplex) திரையரங்குகளின் வருகை, ஓடிடி (OTT) தளங்களின் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றங்களால் பாரம்பரிய ஒற்றைத்திரை திரையரங்குகள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக அலங்கார், வெலிங்டன் போன்ற சென்னையின் வரலாற்றுச் சின்னங்களாக இருந்த பல ஒற்றைத்திரை திரையரங்குகள் ஏற்கெனவே மூடி மறைந்த நிலையில், தற்போது அண்ணா திரையரங்கமும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "நீட் பத்தி யாருமே பேசல!" – மைக் பறிப்பு.. போராட்டத்தில் கொந்தளித்த சனம் ஷெட்டி.. தவெக அரசுக்கு எதிரான சதியா?

அண்ணா திரையரங்கம் இருந்த இடத்தில் வணிக வளாகங்கள் அல்லது வணிக அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படலாம் எனக் கூறப்படுகிறது. சென்னை நகரின் சுவர்களில் சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, கட்-அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்து திரைப்படங்களைக் கொண்டாடிய ஒரு பொற்காலத்தின் நினைவுகளைச் சுமந்து நின்ற அண்ணா திரையரங்கத்தின் மறைவு, சென்னையின் கலாச்சார அடையாளப் பட்டியலில் மேலும் ஒரு இழப்பாகக் கருதப்படுகிறது.