தமிழகத்தில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக (Deemed University) அந்தஸ்து பெற்ற விவகாரத்தில், தங்களது சந்தேகத்தை பகிரங்கமாக உறுதிப்படுத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜுக்கு ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் நிறுவினர் அண்ணாமலை தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த நிர்வாகக் குளறுபடியால் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி த.வெ.க அரசுக்கு அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 3 முக்கிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் திட்டமிட்டு எடுக்கப்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அண்ணாமலை ஏற்கனவே விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ், அந்த 3 தனியார் கல்லூரிகளும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்ட விவரத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.
அமைச்சரின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “எங்களுடைய சந்தேகத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியதற்கு மருத்துவத்துறை அமைச்சருக்கு நன்றி. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு நீதிமன்றத்தை நாட இருப்பதாகச் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இதற்குத் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கவில்லை என்று கூறிய பின்னரும், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) விதிகளின்படி 60 நாட்களுக்குள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காதது யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “அந்த காலகட்டத்தில் நடந்த இந்த மிகப்பெரிய நிர்வாகத் தவறுக்கு எந்தெந்த அதிகாரிகள் பொறுப்பு? யாருடைய அழுத்தத்தின் காரணமாக இந்த தவறு நடந்தது என்பதைத் தமிழக வெற்றிக் கழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் மட்டும் போதாது. இந்த அலட்சியத்தால் மாநில ஒதுக்கீட்டிற்கான 650 மருத்துவ இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்வி பயிலவிருந்த ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் கனவு சிதைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்த இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது த.வெ.க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.





