“பத்தாயிரம் ரூபாய்க்குள்ள நல்ல 5ஜி போன் இருந்தா காட்டுங்க!” – மொபைல் கடைகளில் இன்று எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் கேட்கும் வழக்கமான கேள்வி இது. ஆனால், கடைகளில் இருந்து வரும் பதில் என்னவோ மக்களுக்கு ஏமாற்றத்தையே தருகிறது. “அந்த விலைக்கு இப்போ நல்ல ஃபீச்சர்ஸ் இருக்குற 5ஜி போன் வர்றதே இல்லை. வேணும்னா பட்ஜெட்டை கொஞ்சம் கூட்டுங்க, இல்லைனா நல்ல 4ஜி போனே வாங்கிக்கோங்க!” என்பதுதான் கடைக்காரர்களின் பதிலாக உள்ளது.
இது ஏதோ ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் நிலைமை மட்டும் அல்ல; இந்தியா முழுவதுமே பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தை இத்தகைய கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால், தரவு மையங்களில் (Data Centers) DRAM மற்றும் NAND மெமரி சிப்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஸ்மார்ட்போன்களுக்குத் தேவையான மெமரி சிப்களின் உற்பத்திச் செலவும் இறக்குமதிச் செலவும் உலகம் முழுவதிலும் கடுமையாக உயர்ந்துவிட்டன.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் லாபத்தைப் காப்பாற்றிக்கொள்ள, போன்களின் சராசரி விற்பனை விலையை உயர்த்தி வருகின்றன. சர்வதேச தரவு நிறுவனமான ‘ஐடிசி’ (IDC) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் எண்ட்ரி-லெவல் (ரூ.10,000-க்கு கீழ்) ஸ்மார்ட்போன்களின் வரத்து 74 சதவீதம் வரை சரிந்துள்ளது. குறைந்த விலையில் 5ஜி சிப்செட், நல்ல கேமரா மற்றும் டிஸ்ப்ளே கொடுத்து போன் தயாரிப்பது நிறுவனங்களுக்கு சாத்தியமில்லாமல் போய்விட்டதால், திருப்திகரமான அம்சங்கள் கொண்ட 5ஜி போன்களின் ஆரம்ப விலையே தற்போது ரூ.13,000 முதல் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது.
மறுபுறம், டெலிகாம் நிறுவனங்கள் அன்லிமிடெட் 5ஜி சேவைகளுக்கான ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ளதும் நடுத்தர நுகர்வோரின் சிந்தனையை மாற்றியுள்ளது. “யூடியூப் பார்க்க, வாட்ஸ்அப் பயன்படுத்த, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்ய நல்ல 4ஜி வேகமே போதுமானது. வெறும் 5ஜி என்ற பெயருக்காக எதுக்கு தேவையில்லாமல் கூடுதல் பணம் செலவழிக்க வேண்டும்?” என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இதன் விளைவாக, ரூ.12,000 கொடுத்து அரைகுறை வசதிகள் கொண்ட ஆரம்பகட்ட 5ஜி போனை வாங்குவதை விட, ரூ.7,000 முதல் ரூ.8,000-க்குள் சிறந்த கேமரா, நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் அதிக மெமரி கொண்ட 4ஜி ஸ்மார்ட்போன்களை வாங்குவதே சிறந்தது என இந்திய நுகர்வோர்கள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாகவே நாடு தழுவிய அளவில் 4ஜி போன்களுக்கான தேவை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.





