“விலை ஏறிக்கிட்டே போதே!” – விவோ X300 FE ஸ்மார்ட்போன் மீண்டும் விலை உயர்வு: புது வேரியண்ட் அறிமுகம்!

ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், விவோ நிறுவனத்தின் பிரீமியம் ஃபிளாக்ஷிப் மாடலான ‘விவோ X300 FE’ போனின் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமான இந்த போன், தற்போது இரண்டாவது முறையாக விலை உயர்வைச் சந்தித்துள்ளது. சர்வதேச சந்தையில் மெமரி சிப்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதே இந்த திடீர் விலை உயர்வுக்கு முதன்மை காரணமாகக் கூறப்படுகிறது.

புதிய விலை நிலவரத்தின்படி, 12GB RAM + 256GB சேமிப்புத்திறன் கொண்ட இதன் பேஸ் வேரியண்ட் ரூ.86,999-ல் இருந்து ரூ.3,000 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.89,999 ஆக விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல், அதிக சேமிப்புத்திறன் கொண்ட 12GB RAM + 512GB வேரியண்ட்டின் விலை ரூ.96,999-ல் இருந்து ரூ.99,999 ஆக உயர்ந்து, கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் தொடும் நிலையை எட்டியுள்ளது. இந்தத் திடீர் விலை மாற்றத்தால் பிரீமியம் போன் வாங்குவோரின் திட்டம் சற்றே மாறியுள்ளது.

இந்த விலை உயர்வை ஈடுசெய்யும் வகையில், வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு 8GB RAM + 256GB சேமிப்புத்திறன் கொண்ட புதிய வேரியண்ட் ஒன்றை அறிமுகம் செய்ய விவோ திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடல் ரூ.84,999 விலையில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சற்றே குறைந்த விலையில் ஃபிளாக்ஷிப் அம்சங்களை அனுபவிக்க விரும்புவோருக்கு இந்த 8GB வேரியண்ட் சிறந்த தேர்வாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ரூ.10,000-க்குள் இனி 5ஜி போன் கிடைக்காதா? பட்ஜெட் வாடிக்கையாளர்களை அதிர வைத்த உலகளாவிய விலை உயர்வு!

விலை உயர்ந்தாலும், இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள சக்திவாய்ந்த சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. இதில் 6.31 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. அதிவேகமான செயல்பாட்டிற்காகக் குவால்காமின் சக்திவாய்ந்த ‘ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5’ (Snapdragon 8 Gen 5) பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நீண்ட நேரப் பயன்பாட்டிற்கு ஏற்ற 6,500mAh பேட்டரியும், புகைப்படம் எடுப்பதற்கு 50MP முதன்மை கேமரா கொண்ட பிரீமியம் கேமரா அமைப்பும் இதில் இடம்பெற்றுள்ளன.