சென்னையின் அடையாளமாகத் திகழும் மெரினா கடற்கரைக்கு நாள்தோறும் வருகை தரும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகள் மற்றும் தலைமைச் செயலகப் பூங்கா உள்ளிட்ட 44 முக்கிய பொது இடங்களில் அதிவேக இலவச வைஃபை சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த ஸ்மார்ட் போல்களில் இருந்த வைஃபை சாதனங்களைச் சீரமைத்துத் தற்போதையத் தேவைக்கு ஏற்ப அதிவேக இணையச் சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் மெரினா கடற்கரையில் மட்டும் உழைப்பாளர் சிலை முதல் லைட் ஹவுஸ் வரை 27 இடங்களில் இந்த வைஃபை வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல பெசன்ட் நகர் கடற்கரையில் 5 இடங்களிலும், தலைமைச் செயலகப் பூங்காவில் 12 இடங்களிலும் மக்கள் இந்த வசதியைப் பெறலாம்.
பொதுமக்கள் தங்களது ஸ்மார்ட்போனில் வைஃபை ஆன் செய்தவுடன் திரையில் தோன்றும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் தங்களது மொபைல் எண்ணைப் பதிவிட்டால் உடனடியாக ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபி எண்ணை உள்ளீடு செய்த சில வினாடிகளிலேயே அதிவேக இணைய இணைப்பு கிடைத்துவிடும். கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் பேசவும், ஆபத்தான நேரங்களில் தொடர்புகொள்ளவும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளைச் செய்யவும் இந்தச் சேவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் அடுத்த கட்டமாகச் நகரிலுள்ள முக்கியப் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் இதர கடற்கரைப்பகுதிகளிலும் புதிய ஸ்மார்ட் போல்களை நிறுவி இலவச வைஃபை சேவையை விரிவுபடுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.





