ஏசி எலக்ட்ரிக் பஸ்கள் வருது!: மகளிர் இலவச பயணம் வலுப்பெறுகிறது… 24 மணி நேர GPS கண்காணிப்பு மையம்! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவுகள்!

தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த மிக முக்கியமான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர், துறை சார்ந்த முதன்மைச் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். மாநிலத்தின் போக்குவரத்து கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான 1 ஆண்டு, 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகால நீண்டகாலத் திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதிகாரிகள் அளித்த விளக்கத்தின்படி, தமிழ்நாட்டில் தற்பொழுது 8 அரசுப் போக்குவரத்து கழகங்கள் மூலமாக மொத்தம் 21,527 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 2.5 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். இதில் மிக முக்கியமாக, ஒட்டுமொத்த பயணிகளில் 64% பேர் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணச் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர் என்ற புள்ளிவிவரம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், 1000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமப்புறப் பகுதிகளில் 98.40% இடங்களுக்கு அரசுப் பேருந்து சேவைகள் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பொதுமக்களின் வசதிக்காகவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். குறிப்பாக, மகளிரின் கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தை எவ்வித புகார்களும் இன்றி மேலும் வலுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அதோடு, இனிமேல் புதிதாகக் கொள்முதல் செய்யப்படும் பேருந்துகள் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளாக (AC Electric Buses) மட்டுமே இருக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க இவற்றை அதிகளவில் பயன்பாட்டிற்கு வரவழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பயணிகளுக்குச் சுலபமான பயணத்தை உறுதி செய்ய ‘ஸ்மார்ட் கார்டு’ (Smart Card) அடிப்படையிலான டிஜிட்டல் கட்டண முறையை விரைந்து அமல்படுத்தவும் அறிவுறுத்தினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  “உண்டியல் திருடர்களை தூக்கில் போடுங்க!” ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் திடீர் ராஜினாமா: அப்பட்டமான நாடகம் என அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்!

மேலும், சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பேருந்துகளுக்கென்று தனியான வழித்தடத்தை உருவாக்கும் ‘பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம்’ (BRTS – Bus Rapid Transit System) திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பத்தின் உதவியோடு, மாநிலத்தின் அனைத்துப் பேருந்துகளின் இயக்கத்தையும் 24 மணி நேரமும் தடையின்றி கண்காணிக்கும் ஒரு ‘ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம்’ (Integrated Control Centre) அமைக்கவும் விவாதிக்கப்பட்டது. இறுதியாக, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் கறாரான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.