“உண்டியல் திருடர்களை தூக்கில் போடுங்க!” ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் திடீர் ராஜினாமா: அப்பட்டமான நாடகம் என அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உண்டியல் நன்கொடைகளில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதன் பொதுச்செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். சனிக்கிழமையன்று இந்த ராஜினாமா கடிதங்கள் கிடைக்கப் பெற்றதாக அறக்கட்டளை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

அதிர்ச்சியில் அறக்கட்டளை: பக்தர்கள் கவலைப்பட வேண்டாம் என அறிக்கை!

கடந்த சில நாட்களாக அயோத்தி ராமர் கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு சம்பவங்கள் தங்களை உலுக்கியுள்ளதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த சில நாட்களாக ஸ்ரீ ராமர் கோவிலில் வெளிச்சத்திற்கு வந்துள்ள சம்பவங்களால் நாங்கள் அதிர்ச்சியும், வேதனையும், ஆழ்ந்த மனவருத்தமும் அடைந்துள்ளோம். அனைத்து ராம பக்தர்களின் பிரதிநிதிகளாகவும், இங்கு சேவை செய்யும் தன்னார்வலர்களாகவும், இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களுக்கு அஞ்சல் விடுத்துள்ள அறக்கட்டளை, “பக்தர்கள் தனிப்பட்ட முறையில் அதிகாரிகளிடம் வழங்கிய வெள்ளிச் செங்கற்கள், ஆபரணங்கள் மற்றும் இதர காணிக்கைகள் அனைத்தும் முறையான ஆவணங்களுடன் பாதுகாப்பாக உள்ளன. உண்டியல் மூலம் பெறப்பட்ட நிதியில் நடந்த முறைகேடுகள் குறித்து உபி அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்யப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தகுந்த ஆதாரங்கள் இல்லாத வதந்திகளைப் பரப்ப வேண்டாம். குற்றவாளிகளுக்குச் சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டு, 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  பாஜாக மத்திய அமைச்சரின் மகனுக்கு ரெகுலர் பெயில்! போக்ஸோ வழக்கில் தெலங்கானா கோர்ட் அதிரடி!

“இது வெறும் நாடகம்; திருடர்களைத் தூக்கில் போடுங்கள்” – கெஜ்ரிவால் காட்டம்!

ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகளின் இந்த ராஜினாமா குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது உண்மையான நடவடிக்கை அல்ல என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்கும் ஒரு தந்திரம் என்றும் அவர் சாடியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “ராஜினாமா என்ற போர்வையில் சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோருக்குப் பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுகிறது. வெறும் ராஜினாமாக்கள் மட்டும் இதற்குத் தீர்வாகாது. மக்களின் பக்திப் பணத்தைத் திருடிய உண்டியல் திருடர்களைத் தூக்கில் போட வேண்டும். நேற்று கைது செய்யப்பட்டவர்களைப் போலீஸ் காவலில் எடுத்து ஏன் விசாரிக்கவில்லை? யாரிடம் இந்தத் திருட்டுப் பொருட்களைக் கொடுத்தார்கள், யாருடைய உத்தரவின் பேரில் திருடினார்கள், மீதிப் பணம் எங்கே இருக்கிறது என்ற எந்தக் கேள்வியையும் போலீஸ் கேட்கவில்லை. இதிலிருந்தே இது ஒரு வெறும் கண் துடைப்பு நாடகம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இவர்களுக்குப் பெயில் (Bail) வாங்கித் தந்துவிடுவார்கள். ‘நன்கொடை திருடும் கட்சியின்’ (பாஜக) உயர்மட்டத் தலைவர்களின் ஆசியோடுதான் இத்தனை ஆண்டுகளாக இந்தத் திருட்டு நடந்துள்ளது. இப்போது ஒட்டுமொத்த விவகாரத்தையும் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள்” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.