பாஜாக மத்திய அமைச்சரின் மகனுக்கு ரெகுலர் பெயில்! போக்ஸோ வழக்கில் தெலங்கானா கோர்ட் அதிரடி!

பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகீரத்திற்கு, மைனர் பெண் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ (POCSO) வழக்கில் தெலங்கானா உயர் நீதிமன்றம் வழக்கமான ஜாமீன் (Regular Bail) வழங்கி உத்தரவிட்டுள்ளது. ₹1 லட்சம் பிணைத்தொகை மற்றும் இரண்டு நபர்களின் உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அமைச்சரின் மகன் தசைப்பகுதியில் இந்த கடுமையான பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

சாட்சிகளை கலைக்க வாய்ப்பு என அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, அரசு தரப்பு பொது வழக்கறிஞர் பல்லே நாகேஸ்வர ராவ், குற்றம் சாட்டப்பட்ட பண்டி பகீரத்திற்கு ஜாமீன் வழங்கக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

மத்திய அமைச்சரான தனது தந்தையின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சாட்சிகளை அச்சுறுத்தவும், ஆதாரங்களைக் கலைக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இந்த வழக்கில் மிக விரைவில் காவல்துறை குற்றப்பத்திரிகை (Chargesheet) தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஸ்டாலினே எனக்கு போன் பண்ணி எடப்பாடிய முதலமைச்சர் ஆக்க கேட்டார்!" - அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் அதிரடி குற்றச்சாட்டு!

பகீரத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர் ஏற்கனவே 40 நாட்களுக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்துள்ளதாகவும் கூறி ஜாமீன் கோரினார். முன்னதாக ஜூன் மாதத்தில் தேர்வு எழுதுவதற்காக இவருக்கு 7 நாட்கள் interim ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக அமைச்சர் மகனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் பின்னணி

கடந்த மே 8 ஆம் தேதி தெலங்கானாவின் பெட்பஷீராபாத் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 17 வயது மைனர் பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில் இந்த எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகள் 74, 75 (பெண்ணின் கற்புக்குப் பங்கம் விளைவித்தல், பாலியல் தொல்லை) மற்றும் போக்ஸோ சட்டத்தின் 11, 12 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருமண ஆசை காட்டி அந்தப் பெண்ணை தவறான உடல் ரீதியான செயல்களுக்கு உட்படுத்தியதாகவும், மது அருந்துமாறு கட்டாயப்படுத்தியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியால் அந்த மைனர் பெண் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்ட பண்டி பகீரத், தன் மீது புகார் அளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கரீம்நகர் காவல் நிலையத்தில் ஒரு எதிர் புகாரை அளித்திருந்தார். அதில், அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்களிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டுவதாகவும், பணம் தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி பொய் வழக்கில் சிக்க வைக்கப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மே 16 அன்று கைது செய்யப்பட்ட பகீரத், சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது கருத்து தெரிவித்த பாஜக அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று கூறியிருந்தார்.