பாஜக – திமுக ரகசிய உறவா? அமைச்சர் நிர்மல் குமாருக்கு தமிழிசை கொடுத்த மரண அடி! “முதல்ல அந்த மின்வெட்டை சரி பண்ணுங்க!” ஃபைல் காணாமல் போன விவகாரத்தையும், சிபிசிஐடி தாமதத்தையும் போட்டுடைத்த பாஜாக மூத்த தலைவர்!

திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (DMK) பாரதிய ஜனதா கட்சி ரகசிய உறவில் இருப்பதாகத் தவெக அரசின் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் முன்வைத்த அரசியல் குற்றச்சாட்டிற்குப் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மிகக் கடுமையான வார்த்தைகளில் தனது பதிலடியைப் பதிவு செய்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட போது, இத்தகைய புகார்கள் முற்றிலும் தவறான கண்ணோட்டம் மற்றும் அரசியல் திசைதிருப்பல் என்று அவர் சாடினார்.

எங்களுக்கும் யாருக்கும் எந்தவிதமான ரகசிய உறவும் கிடையாது, பாஜாக எப்போதுமே தனது அரசியல் கொள்கைகளில் வெளிப்படைத்தன்மையுடன் மட்டுமே இயங்கி வருகிறது என்று குறிப்பிட்ட தமிழிசை, அமைச்சர் நிர்மல் குமார் மற்றவர்கள் மீது வீண் பழி சுமத்துவதை நிறுத்திவிட்டு முதலில் தமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினையைச் சரிசெய்ய வழி தேட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் அமைச்சர் நிர்மல் குமார் யார் கூட ரகசிய உறவு வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் தொடர் மின்தடையை ஏற்படுத்தி வருகிறார், மின்சாரத் துறையின் முக்கிய கோப்புகள் மற்றும் ஃபைல்கள் எல்லாம் யாருடைய ரகசிய பின்புலத்தால் காணாமல் போகின்றன என்பதை அவர்தான் விளக்க வேண்டும் என்று எதிர் அட்டாக் செய்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "தவெக அப்படி செய்திருக்க கூடாது!" ஆட்சி அமைக்க உரிமை கோரியதில் விஜய் செய்த சொதப்பல் என்ன? டி.கே.எஸ்.இளங்கோவன் விளாசல்!

மின்தடை ஏற்பட்டு மக்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்ட பிறகு, ஒரு வாரம் கழித்து அதற்குச் சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்கு அமைச்சர் ஏற்பாடு செய்வதன் மர்மம் என்ன என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே செய்ய வேண்டிய பாதுகாப்பு மற்றும் விசாரணை ஏற்பாடுகளை விபரீதம் நடந்து முடிந்த பின்னர் அறிவிப்பது ஏன் என்றும், அமைச்சர் யார் கூடக் கைகோர்த்துக் கொண்டு இந்தத் தற்காலிக மின்வெட்டு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர் என்றும் கூறி அமைச்சர் நிர்மல் குமாரின் புகாரை அவரது மின்சாரத் துறை தோல்விகளை நோக்கியே திருப்பி விட்டுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.