தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று வெற்றிகரமாக ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாமல்லபுரத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் எதிர்காலப் போக்கு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து மிகக் கடுமையான மற்றும் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொகுதிப் பணியே அடுத்த தேர்தல் சீட்!
தொகுதியிலோ அல்லது கட்சி ரீதியாகவோ எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாகத் தன்னை நேரில் சந்திக்கலாம் என்று கூட்டத்தில் உறுதியளித்த முதல்வர் விஜய், எம்எல்ஏக்களுக்கு ஒரு தெளிவான அளவுகோலை நிர்ணயித்திருக்கிறார். “உங்கள் தொகுதியில் நீங்கள் செய்யக்கூடிய பணிதான் அடுத்த தேர்தலில் உங்களை வேட்பாளராக நிற்க வைக்கும்” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் மக்கள் நலப் பணிகளில் தொய்வு ஏற்படும் பட்சத்தில் அது நேரடியாகவே தேர்தல் வாய்ப்புகளைப் பாதிக்கும் என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.
தன்னை நேரில் சந்திக்க யாராவது தடுத்தால், உடனடியாகத் தன்னிடம் தெரிவிக்குமாறு மாமல்லபுரம் சந்திப்பின் போது தவெக எம்எல்ஏக்களை முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார். நிர்வாகப் பணிகளை முடக்கும் நோக்கில் எதிர்தரப்பினர் பரப்பும் அவதூறுகளைத் தாண்டி, மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பத்துக் கட்டளைகளும் நிர்வாக ஒழுங்கு நடவடிக்கைகளும்!
ஆட்சிப் பொறுப்பின் வெற்றிகரமான அரையாண்டு சாதனைகளைக் குறிப்பிட்டுக் காட்டிய விஜய், எம்எல்ஏக்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டிய பத்துக் கட்டளைகளையும் முக்கிய நெறிமுறைகளையும் வகுத்துத் தந்துள்ளார்.
-
வெற்றிகரமாக ஆறு மாதங்களைக் கடந்துள்ளோம்; தொடர்ந்து மக்கள் சேவையில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும்.
-
நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்களுக்கான சேவையைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
-
நாம் கொண்டுவரும் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் தீவிர கவனம் செலுத்துங்கள்.
-
எதிர்க்கட்சிகள் அதிகமாக இருப்பதால் நமக்கு எதிரான கருத்துகள் அதிகமாக வருகிறது.
-
நமக்கு எதிராக அதிகமான கருத்துகள் உள்ளது என யாரும் சோர்ந்துவிட வேண்டாம்.
-
நமது ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களையும், செயல்பாடுகளையும் பொறுத்துக்கொள்ள முடியாமல், பல்வேறு தவறான, அவதூறு செய்திகளைப் பரப்பி, அரசு நிர்வாகத்தை முடக்க தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
-
அவதூறு பரப்பும் செயல்களுக்கு நமது சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த விதத்திலும் இடம் தந்துவிடக் கூடாது.
-
எந்தவொரு அரசியல் ‘Trap’-லும் சிக்காமல் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
-
சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளேன்; நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் என்னை சந்திக்கலாம்.
-
என்னை யாராவது பார்க்க விடாமல் உங்களைத் தடுக்கிறார்களா?
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொள்ளும் விதமாகவும், அரசின் நிர்வாகத் திறனை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும் முதல்வர் விஜய் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.