கிரெடிட் கார்டு அதிகமா பயன்படுத்துறீங்களா? சிபில் ஸ்கோர் குறையாமல் தப்ப செய்ய வேண்டியவை!

இன்றைய காலத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வங்கிகளும் பல்வேறு சலுகைகளுடன் கிரெடிட் கார்டுகளை தாராளமாக வழங்கி வருகின்றன. இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் குறிப்பிட்ட கடன் வரம்பு (Credit Limit) நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அந்த வரம்பில் நாம் எவ்வளவு சதவீதத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதைக் குறிப்பதே ‘கிரெடிட் யூட்டிலைசேஷன் ரேஷியோ’ (Credit Utilization Ratio – CUR) ஆகும்.

நிதி வல்லுநர்களின் கருத்துப்படி, உங்களின் மொத்த கிரெடிட் பயன்பாடு எப்போதும் 30 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த 30% விதி ஒரு கார்டுக்கு மட்டும் பொருந்துமா அல்லது அனைத்து கார்டுகளுக்கும் பொருந்துமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. கடன் வழங்கும் அமைப்புகளான சிபில் போன்றவை உங்களின் CUR-ஐக் கணக்கிடும்போது, உங்களிடம் உள்ள அனைத்துக் கார்டுகளின் மொத்த கடன் வரம்பையும், அதில் நீங்கள் பயன்படுத்திய மொத்தத் தொகையையுமே கணக்கில் எடுத்துக் கொள்ளும்.

உதாரணமாக, உங்களிடம் 3 கார்டுகள் உள்ளன என்றும், அவற்றின் மொத்த கடன் வரம்பு ரூ.4 லட்சம் என்றும் வைத்துக்கொள்வோம். அதில் நீங்கள் ரூ.80,000 மட்டுமே செலவிட்டு இருந்தால், உங்களின் ஒட்டுமொத்த பயன்பாட்டு விகிதம் 20% மட்டுமே. இதனால் ஒரு கார்டில் அதிகமாகவும் மற்றொன்றில் குறைவாகவும் செலவழித்தாலும் மொத்த பயன்பாட்டு சதவீதம் குறைவாகவே இருக்கும் என்பதால் சிபில் ஸ்கோருக்குப் பெரிய பாதிப்பு ஏற்படாது.

இருப்பினும், ஒட்டுமொத்தப் பயன்பாடு குறைவாக இருந்தாலும், ஒரே கார்டின் கடன் வரம்பில் 80% முதல் 90% வரை பயன்படுத்துவது நல்லதல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஒரே கார்டை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது, நீங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதாகவோ அல்லது கடனை அதிகம் சார்ந்திருப்பதாகவோ கடன் அமைப்புகள் கருதி, உங்கள் சிபில் ஸ்கோரைக் குறைக்க வாய்ப்புள்ளது.

சிபில் ஸ்கோரைப் பாதுகாப்பாக வைத்திருக்க, பெரிய செலவுகளுக்கு ஒரே கார்டைச் சார்ந்திருக்காமல் பல கார்டுகளுக்குச் செலவுகளைப் பிரித்து அளிக்க வேண்டும். எந்தவொரு கார்டிலும் 80% வரம்பைத் தாண்டக் கூடாது. தவிர்க்க முடியாத சூழலில் அதிக செலவு செய்ய நேரிட்டால், பில் ஸ்டேட்மெண்ட் வரும் தேதிக்கு முன்பே அதில் ஒரு பகுதியைச் செலுத்திவிட்டால் அது சிபில் அறிக்கையில் பதிவாகாது. மேலும், வங்கி கடன் வரம்பை உயர்த்த முன்வரும்போது அதை ஏற்றுக்கொள்வது, உங்களின் CUR சதவீதத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.