Fuel Crisis Measures: ஐடி மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வாரம் 2 நாட்கள் WFH? டெல்லி அரசு வெளியிட்ட அதிரடி அறிவுறுத்தல்; கார் பூலிங் செய்ய கோரிக்கை!

தலைநகர் டெல்லியில் உள்ள ஐடி நிறுவனங்கள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் (Work From Home) வாய்ப்பை வழங்குமாறு டெல்லி அரசு பலத்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

சர்வதேச அளவில் நிலவி வரும் அசாதாரண சூழல் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு மத்தியில், நாட்டின் எரிபொருள் தேவையைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் ரேகா குப்தா அண்மையில் தொடங்கி வைத்த 90 நாட்கள் நீடிக்கும் ‘மேரா பாரத், மேரா யோக்டான்’ (Mera Bharat, Mera Yogdan) என்ற எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி தொழிலாளர் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட இந்த ஆலோசனைக் குறிப்பில், அரசுத் துறை அலுவலகங்களில் ஏற்கனவே 2 நாட்கள் WFH முறை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது தனியார் துறையும் இதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினசரி அலுவலகப் போக்குவரத்து தான் டெல்லியில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) போன்ற எரிபொருள்கள் பெருமளவில் வீணாவதற்குக் முக்கியக் காரணமாக உள்ளது. எனவே, நேரடியாக அலுவலகம் வந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு எரிபொருளைச் சேமிக்கும் வகையில் ‘கார் பூலிங்’ (Car Pooling) எனப்படும் ஒரே வாகனத்தில் பலரும் இணைந்து பயணிக்கும் முறையை ஊக்குவிக்குமாறு நிறுவனங்களுக்கு அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஊழியர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை அதிகரிக்கச் செய்தல், ஷிப்ட் நேரங்களை மாற்றி அமைப்பது மற்றும் நேரில் நடக்கும் கூட்டங்களை ஆன்லைன் வழியாக மாற்றுவது போன்ற உத்திகளையும் கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அதிரடி உத்தரவானது ஐடி, ஐடிஇஎஸ், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குப் பொருந்தும் என்றும், மருத்துவமனை, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் டெல்லி அரசு தெளிவுபடுத்தியுள்ளது.