அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி? தவெக அரசு அதிரடி திட்டம்!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும், அவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும் தொடர்ந்து பல்வேறு முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பள்ளி சத்துணவு திட்டத்தில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை பரிசீலித்து வருகிறது.

அதன்படி, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவாக வாரம் ஒருமுறை ‘சிக்கன் பிரியாணி’ வழங்கும் முன்மொழிவை பள்ளித் கல்வித்துறை அமைச்சர் ஏ. ராஜமோகன், முதல்வர் சி. ஜோசப் விஜய்யிடம் சமர்ப்பித்துள்ளார். இந்த வரைவு திட்டத்தை முதல்வர் தற்போது விரிவாக ஆய்வு செய்து வருகிறார்.

இத்திட்டம் குறித்து பேசிய அமைச்சர் ராஜமோகன், “தமிழகத்தின் ஒவ்வொரு முக்கிய அரசியல் காலகட்டத்திலும் பள்ளி ஊட்டச்சத்து திட்டம் தனது சொந்த வழியில் வலுப்படுத்தப்பட்டுள்ளது. நீதிக்கட்சி இலவச உணவை அறிமுகப்படுத்தியது, பெருந்தலைவர் காமராஜர் அதை மதிய உணவு திட்டமாக விரிவுபடுத்தினார், கலைஞர் கருணாநிதி முட்டையைச் சேர்த்தார், எம்.ஜி.ஆர் அதைச் சத்துணவுத் திட்டமாக மாற்றினார், ஜெயலலிதா முட்டை விநியோகத்தை மேலும் விரிவுபடுத்தினார். அந்த வரிசையில், வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை முதல்வர் முன் வைத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "சோபா வந்தவுடன் சிலர் நம்மள விட்டுட்டு போயிட்டாங்க!" – மேடையில் தவெக-வை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்! பரபரப்பு பேச்சு!

இருப்பினும், இத்திட்டம் தற்போது கருத்துரு நிலையிலேயே உள்ளதாகவும், நிதியொதுக்கீடு மற்றும் அமலாக்கம் குறித்து முதல்வர் விஜய்யின் ஒப்புதலுக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அரசு உயர் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும், ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்’ கீழ் வழங்கப்படும் உணவுகளின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரவா உப்மா, கோதுமை உப்மா போன்ற ஒரே மாதிரியான உணவுகளுக்குப் பதிலாக, மாணவர்களுக்குப் பிடித்தமான சத்துள்ள புதிய உணவு வகைகளைச் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்சமயம் காலை உணவிற்காக ஒரு மாணவருக்கு ரூ.15 வரை செலவிடப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே பள்ளி ஊட்டச்சத்து திட்டங்களில் தமிழகம் எப்போதும் ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறது. காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம், காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களைக் கண்டு தற்போது காலை உணவுத் திட்டம் வரை விரிவடைந்துள்ளது. வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டம் ஒப்புதல் பெற்றால், அது தமிழக சத்துணவு வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.