தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்’ பெயரை அதிரடியாக மாற்றி, ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் சூட்டி முதலமைச்சர் விஜய் அரசாணை வெளியிட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட இத்திட்டம், அரசுத் தொடக்கப் பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எனினும், அரசுத் திட்டங்களுக்குத் தனிநபர்களின் அல்லது பதவிகளின் பெயர்களைச் சூட்டுவதற்குப் பதிலாக, வரலாற்றுத் தலைவர்களின் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்ற விவாதம் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, கல்வித் துறைக்கு அஸ்திவாரம் அமைத்த பெருந்தலைவர் காமராஜரின் பெயரையே இத்திட்டத்திற்குச் சூட்டி புதிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இப்பெயர் மாற்ற அறிவிப்புடன் சேர்த்து, இத்திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்ய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் இந்த விரிவாக்கம் முழுமையாக அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 15,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 15 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகப் பயனடைவார்கள்.
அரசாணையின்படி, பள்ளி செயல்படும் 210 வேலை நாட்களில் ஒரு மாணவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.12.71 செலவினமாகக் கணக்கிடப்பட்டு, ஆண்டுதோறும் ரூ.343 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக அரசால் தொடங்கப்பட்ட அடையாளத் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் காரசார விவாதத்தைக் கிளப்பியுள்ளது. திட்டத்தின் உட்கட்டமைப்பை மாற்றாமல் பெயரைக் கௌரவிப்பது வரவேற்பிற்குரியது என ஒரு தரப்பும், முந்தைய அரசின் அடையாளத்தை மறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகின்றன.





