போதைப்பொருள் சர்ச்சையில் காரசார விவாதம்: உதயநிதி கேள்விக்கு அமைச்சர் சரத்குமார் அளித்த அதிரடி பதில்!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை மற்றும் பழைய சர்ச்சைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் இடையே கடுமையான காரசார விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் மீது குற்றச்சாட்டு எழுந்த உடனேயே கட்சி தலைமை அவர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வெளியேற்றியது. ஆனால், தற்போதைய அமைச்சர் ஒருவர் மைதானத்தில் பவுடர் வைத்திருந்த சம்பவம் உலகறிந்த ஒன்று. அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு உடனடியாகப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சரத்குமார், “ஸ்டேடியத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து நான் ஏற்கனவே போதுமான விளக்கங்களை அளித்துவிட்டேன். அந்த சம்பவம் நடைபெற்ற காலத்தில் திமுகதான் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது. அப்படியென்றால், அவர்கள் ஆட்சியில் கிரிக்கெட் மைதானத்தின் வாசலிலேயே போதைப்பொருட்களை விற்பனை செய்ய அனுமதித்தார்களா? தெளிவான விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும் தேவையில்லாமல் விமர்சனங்களை முன்வைப்பது ஏற்புடையதல்ல” என்று காட்டமாகத் திருப்பி அடித்தார்.

சட்டமன்றத்தில் இரு தரப்பிற்கும் இடையே நிகழ்ந்த இந்தத் திடீர் போதைப்பொருள் விவாதமும் பதிலடிகளும் அவைத் தலைவரால் பதிவு செய்யப்பட்டு, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.