“பள்ளி அங்கீகார மோசடி வழக்கு!” முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி கைது!

தனியார் பள்ளிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கின் பின்னணியில், திமுகவின் முன்னணித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவரது முன்ஜாமீன் மனுத் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமைந்தகரையில் உள்ள சட்ட ஆலோசகரின் அலுவலகத்திற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கச் சென்ற அன்பில் மகேஷை போலிஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரைச் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று மத்திய குற்றப்பிரிவு போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை!” – துரைமுருகன் கடும் கொந்தளிப்பு:

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் கைது நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஆளுங்கட்சி எதிர்க்கட்சியைப் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது. எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. அதை நாங்கள் நீதிமன்றத்தில் நிருபிப்போம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முன்ஜாமீன் ரத்தான சில மணி நேரங்களிலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இந்த கைது நடவடிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது!