இன்றைய நவீன காலகட்டத்தில் காதலிப்பதும், பின்னர் சில காரணங்களால் அவர்களுக்குள் பிரேக்ப் (Breakup) ஏற்படுவதும் பரவலாக நடக்கும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. பல வருடங்களாக மிக நெருக்கமாக, ஒருவருக்கொருவர் உருகி உருகிக் காதலித்தவர்கள் கூட, திடீரென்று ஒரு நாளில் “இந்த உறவு எனக்குச் சரிப்பட்டு வராது” என்று கூறி பிரிந்து விடுவதைப் பார்த்திருப்போம். இதற்குக் காரணம் கேட்டால், அவர்களுக்குள் பெரிய சண்டைகளோ அல்லது துரோகங்களோ கூட நடந்திருக்காது; ஆனால் ஏதோ ஒரு மனமாற்றம் அவர்களைப் பிரியத் தூண்டியிருக்கும்.
இதுபோன்ற விசித்திரமான மற்றும் திடீர் காதல் முறிவுகளுக்குப் பின்னால் ஒரு அசைக்க முடியாத அறிவியல் காரணம் ஒளிந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர். இருபதுகளின் நடுப்பகுதியில் நடக்கும் இந்த அதிரடி மாற்றத்திற்குத் தான் விஞ்ஞானிகள் ‘பிரண்டல் லோப் பிரேக்ப்’ (Frontal Lobe Breakup) என்று பெயரிட்டுள்ளனர்.
உளவியல் மற்றும் நரம்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த திடீர் காதல் முறிவுகள் ஒருவருடைய குண மாற்றத்தினால் ஏற்படுவது அல்ல, அது மனித மூளையின் வளர்ச்சியோடு நேரடித் தொடர்புடையது. மனித மூளையின் முன்பகுதியில் இருக்கும் ‘பிரீபிரண்டல் கார்டெக்ஸ்’ (Prefrontal Cortex) என்ற பகுதிதான் திட்டமிடுதல், தீர்க்கமான முடிவுகளை எடுத்தல் மற்றும் நீண்ட கால விளைவுகளைக் கணக்கிடுதல் போன்ற முக்கிய நிர்வாகப் பணிகளைக் கவனிக்கிறது.
ஒரு மனிதனுக்கு 20 வயது ஆகும் வரை இந்த பிரீபிரண்டல் கார்டெக்ஸ் பகுதி முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது. சிலருக்கு இந்த முழுமையான முதிர்ச்சி ஏற்படுவதற்கு 25 வயது வரை கூட ஆகலாம். மூளையின் இந்த பகுதி முழுமையாக வளராத வரை, மனிதர்களால் எதிர்காலத்தைப் பற்றிய மிகச் சரியான முடிவுகளைத் தீர்க்கமாக எடுக்க முடிவதில்லை.
டீனேஜ் மற்றும் 20 வயதின் தொடக்கத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு மூளையின் இந்த பகுதி முதிர்ச்சி அடையாமல் இருப்பதால், அந்த சமயத்தில் ஏற்படும் சாதாரண ஈர்ப்புகளையும், ஆசைகளையும் அவர்கள் தங்களது வாழ்நாள் முழுமைக்குமான உண்மையான காதல் என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அந்த பருவத்தில் உணர்ச்சிகள் மட்டுமே மேலோங்கி இருக்குமே தவிர, பகுத்தறிவு குறைவாகவே இருக்கும்.
ஆனால், அவர்களுக்கு 25 வயது நெருங்கும்போது, மூளையின் பிரீபிரண்டல் கார்டெக்ஸ் பகுதி முழுமையாக வளர்ச்சி அடைந்து, அசாத்தியமான முடிவெடுக்கும் ஆற்றலையும், தெளிவையும் தருகிறது. இந்த முதிர்ச்சி ஏற்படும் போதுதான், தாங்கள் இவ்வளவு காலம் பழகிய உறவில் இருக்கும் குறைபாடுகளும், அதன் யதார்த்தமற்ற தன்மைகளும் அவர்களுக்குப் புரியத் தொடங்குகின்றன.
மூளை முழுமையான முதிர்ச்சியை எட்டியவுடன், “நாம் ஏன் இந்த உறவில் இருக்கிறோம்? இவருடன் நமது எதிர்காலம் சரியாக இருக்குமா?” என்ற தர்க்கரீதியான கேள்விகள் மனதில் எழ ஆரம்பிக்கும். அதுவரை காதலாகத் தெரிந்த பல விஷயங்கள், வெறும் முட்டாள்தனமான ஈர்ப்பு என்பது புரிய வரும்போது, அந்த உறவில் உள்ள போலித்தனம் வெளிச்சத்திற்கு வருகிறது.
இதன் காரணமாகவே, எவ்வித பெரிய காரணங்களும் இன்றி பல காதல் கதைகள் 25 வயதை எட்டும்போது திடீர் முடிவுக்கு வருகின்றன. இந்த ‘பிரண்டல் லோப் பிரேக்ப்’ என்பது ஒரு மனிதன் தனது வாழ்க்கையை இன்னும் முதிர்ச்சியுடனும், பொறுப்புடனும் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டான் என்பதைக் காட்டும் ஒரு இயற்கையான அறிவியல் மாற்றமே தவிர வேறில்லை.





