The Liver-Brain Connection: உடற்பயிற்சி செய்யும்போது கல்லீரலில் இப்படி ஒரு ரகசியம் நடக்குதா? ஞாபக மறதியை ஓட ஓட விரட்டும் “அதிசய என்சைம்”… ‘செல்’ இதழின் பிரம்மாண்ட ஆராய்ச்சி!

முதுமை மற்றும் வயோதிகம் காரணமாகப் பலருக்கும் ஏற்படும் மிக முக்கியப் பாதிப்பு ஞாபக மறதி ஆகும். வயது முதிரும்போது மூளையின் செயல்பாடுகள் குறைந்து, விஷயங்களை எளிதில் மறந்துவிடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த ஞாபக மறதி மற்றும் அல்சைமர் (Alzheimer’s) போன்ற தீவிர நினைவாற்றல் இழப்பு நோய்களை, தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் முற்றிலும் தடுத்து, இழந்த நினைவாற்றலை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என உலகப் புகழ்பெற்ற ‘செல்’ (Cell) அறிவியல் இதழில் வெளியாகியுள்ள புதிய மருத்துவ ஆய்வு அறிக்கை உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய இந்த பிரம்மாண்ட ஆராய்ச்சியில், உடற்பயிற்சி செய்யும்போது நமது மூளை நேரடியாகப் பலன் பெறுவதை விட, நமது ‘கல்லீரல்’ (Liver) மூலமாகத்தான் மூளைக்கு அசுர பலம் கிடைக்கிறது என்ற அதிரடி உண்மை வெளிவந்துள்ளது.

நாம் தினமும் ஓட்டப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யும்போது, நமது உடலின் திசுக்கள் மற்றும் கல்லீரலில் இருந்து ‘எக்சர்கைன்’ (Exerkines) எனப்படும் ஒரு சிறப்பு சிக்னல் மூலக்கூறுகள் ரத்தத்தில் சுரக்கின்றன. இந்த எக்சர்கைன் குடும்பத்தில் உள்ள ‘ஜிபிஎல்டி1’ (GPLD1) என்ற என்சைம் தான் இந்த ஞாபக மறதிப் போரில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

மனித உடலின் மூளைக்குள் ஆபத்தான நச்சுப் பொருட்கள் மற்றும் தேவையற்ற கழிவுகள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக, மூளையின் ரத்த நாளங்களைச் சுற்றி ‘பிளட்-பிரைன் பேரியர்’ (Blood-Brain Barrier – BBB) எனப்படும் ஒரு மிகப்பலத்த பாதுகாப்பு அரண் அல்லது ரத்த நாண் சுவர் உள்ளது. வயது முதிரும்போது, இந்த பாதுகாப்புச் சுவரில் ‘டிஎன்ஏபி’ (TNAP) என்ற புரதம் அதீதமாகப் படிந்து, அந்த சுவரைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பலவீனப்படுத்தி, ஓட்டைகளை (Leaky Blood Vessels) ஏற்படுத்தி விடுகிறது. இதனால் மூளைக்குள் நச்சுகள் நுழைந்து வீக்கம் ஏற்பட்டு, கடுமையான ஞாபக மறதி நோய் உருவாகிறது.

விஞ்ஞானிகளின் இந்த புதிய ஆய்வின்படி, நாம் உடற்பயிற்சி செய்யும்போது கல்லீரலில் இருந்து பெருமளவில் வெளியாகும் இந்த ஜிபிஎல்டி1 (GPLD1) என்சைம், ரத்தத்தின் வழியாக மூளையின் எல்லைப் பகுதிக்குத் பயணிக்கிறது. ஆனால், இந்த என்சைம் மூளைக்குள் நேரடியாக நுழைவதில்லை. அதற்குப் பதிலாக, மூளையின் வெளிப்புற ரத்த நாளச் சுவர்களில் பசை போல ஒட்டிக்கொண்டிருக்கும் ஆபத்தான டிஎன்ஏபி (TNAP) புரதங்களை ஒரு ‘கத்தரிக்கோல்’ போல துல்லியமாக வெட்டி எறிகிறது.

இதன் காரணமாக, முதுமையால் ஓட்டையாகிப் போன மூளையின் பாதுகாப்பு அரண் மீண்டும் பளபளப்பாகச் சீரமைக்கப்பட்டு, மூளை வீக்கம் குறைகிறது. இந்த அதிசய நிகழ்வால், வயதான எலிகள் மற்றும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு நடத்தப்பட்ட நினைவாற்றல் சோதனைகளில், அவை மீண்டும் தங்களது இளமைக்கால சுறுசுறுப்பான நினைவாற்றலையும், கற்கும் திறனையும் அசுர வேகத்தில் திரும்பப் பெற்றது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாத்திரை வடிவில் வரும் உடற்பயிற்சி! வயது முதிர்வு அல்லது பக்கவாதம் காரணமாகப் படுக்கையில் இருக்கும் முதியவர்களால் ஓடி ஆடி உடற்பயிற்சி செய்ய முடியாது. இதைக் கருத்தில் கொண்டு, உடற்பயிற்சி செய்யாமலேயே கல்லீரலில் இந்த மாற்றத்தை தூண்டும் வகையில், இந்த ஜிபிஎல்டி1 (GPLD1) என்சைம்களை அடிப்படையாகக் கொண்டு புதிய மாத்திரைகளை (Exercise-mimicking Drugs) உருவாக்கும் பணிகளில் தற்பொழுது விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த மருந்து பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், உலகெங்கிலும் லட்சக்கணக்கான முதியவர்களை வாட்டும் அல்சைமர் மற்றும் ஞாபக மறதி நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என மருத்துவ உலகம் நம்புகிறது.