உலக அளவில் தேடுபொறி தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் கூகுள் (Google) நிறுவனம், தற்பொழுது மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் கொசுக்களை ஒழிக்கும் ஒரு புதிய மருத்துவத் தொழில்நுட்பக் களத்தில் அதிரடியாகக் குதித்துள்ளது. டெங்கு மற்றும் ஜிகா போன்ற உயிர்க்கொல்லி வைரஸ் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக, தங்களது தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் கீழ் செயல்படும் ‘வெரிலி’ (Verily) அமைப்பின் மூலம் ஆய்வகத்தில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கோடிக்கணக்கான ஆண் கொசுக்களைப் பொதுவெளியில் பறக்கவிடக் கூகுள் நிறுவனம் தற்பொழுது திட்டமிட்டுள்ளது.
இதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் புளோரிடா ஆகிய மாகாணங்களில் சுமார் 3.2 கோடி ஆண் கொசுக்களை வெளியிடுவதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை அமெரிக்க அரசிடம் கூகுள் நிறுவனம் தற்பொழுது கோரியுள்ளது.
இந்த விசித்திரமான திட்டத்தின் கீழ், கூகுள் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் வோல்பாக்கியா (Wolbachia) என்ற இயற்கையான பாக்டீரியாவைக் கொண்டு மில்லியன் கணக்கான ஆண் கொசுக்களை உருவாக்கியுள்ளனர். இந்த கொசுக்கள் மனிதர்களைக் கடிக்காது என்பது இதன் மிக முக்கிய அம்சமாகும்.
இந்த ஆய்வக ஆண் கொசுக்களைப் பொதுவெளியில் வெளியிடும் போது, அவை அங்குள்ள சாதாரண பெண் கொசுக்களுடன் இணையும். அவ்வாறு இணையும் போது உருவாகும் பெண் கொசுக்களின் முட்டைகள் அனைத்தும் பொரிக்காமல் (Sterile) போய்விடும். இதன் காரணமாக, அடுத்தடுத்த தலைமுறை கொசுக்கள் உருவாவது முற்றிலும் தடுக்கப்பட்டு, ஒட்டுமொத்த கொசுக்களின் எண்ணிக்கை மிகக் குறுகிய காலத்தில் மளமளவெனக் குறையும் என விஞ்ஞானிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
உலகில் கொசுக்களின் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல், ஜிகா வைரஸ் மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்பொழுது அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் புளோரிடா மாகாணங்களில் இதற்கான சோதனை முயற்சியை மேற்கொள்ளக் கூகுள் தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கனவே சில பகுதிகளில் இதற்கான முதற்கட்ட சோதனைகள் நல்ல பலனைத் தந்துள்ள நிலையில், தற்பொழுது 3.2 கோடி கொசுக்களைப் பெரிய அளவில் வெளியிடுவதன் மூலம் இந்த ஆபத்தான நோய்ப் பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது. அமெரிக்க அரசின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் துறையின் ஒப்புதல் கிடைத்தவுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த அதிநவீன கொசு ஒழிப்புத் திட்டம் அங்கு முழு வீச்சில் செயல்படுத்தப்பட உள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த புதுமையான அறிவியல் முயற்சி ஒட்டுமொத்த உலக மருத்துவத் துறையினரையும் தற்பொழுது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.





