“ரசிகர்களே வேண்டாம் என்கிறீர்களா?” – நடிகை ஜான்வி கபூரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி!

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது பெயர், உருவம் மற்றும் குரல் உள்ளிட்ட ஆளுமை உரிமைகளைப் (Personality Rights) பாதுகாக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இணையத்தில் தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி ஆபாச உள்ளடக்கங்கள் பரப்புவது, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் போலியான டீப்ஃபேக் (Deepfake) படங்களை உருவாக்குவது மற்றும் தனது பெயரில் போலியான சமூக வலைதளப் பக்கங்களை நடத்தி வியாபாரம் செய்வது போன்ற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனுப் ஜெயராம் பாம்பானி தலைமையிலான அமர்வு, ஜான்வி கபூரின் உருவத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஆபாச உள்ளடக்கங்கள், ஏஐ டீப்ஃபேக் படங்கள் மற்றும் அவரது பெயரில் பொருட்களை விற்பனை செய்யும் வணிகப் பக்கங்களை உடனடியாக இணையத்திலிருந்து அகற்ற (Takedown) உத்தரவிட்டது.

இருப்பினும், ஜான்வி கபூரின் வழக்கறிஞர் ஆயிரக்கணக்கான லிங்க்குகளைச் சுட்டிக்காட்டி, அவரது பெயரில் இயங்கும் அனைத்து ரசிகர் பக்கங்களையும் (Fan Pages) மற்றும் விமர்சனப் பக்கங்களையும் ஒட்டுமொத்தமாகத் தடை செய்ய வேண்டும் எனக் கோரியது நீதிமன்றத்தை யோசிக்க வைத்தது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி, “உங்களுக்கு ரசிகர்களே வேண்டாம் என்று கூறுகிறீர்களா?” என ஜான்வி கபூரின் வழக்கறிஞரிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். “பொதுவெளியில் வாழும் பிரபலங்கள் மீது விமர்சனங்களும், ரசிகர்களின் கருத்துக்களும் வருவது இயல்பானது. ரசிகர் பக்கங்கள் அனைத்தும் குற்றவாளிப் பக்கங்கள் அல்ல. அவற்றில் சில நகைச்சுவையான விமர்சனங்களாகவும் (Satire) இருக்கலாம். ஒரு நடிகையாக உங்களுக்கு ரசிகர் பக்கங்களை முழுமையாகத் முடக்கும் தனி உரிமை (Monopoly) கிடையாது” என்று நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "இந்த பொழப்புக்கு வேற எதுனா பண்ணலாம்!" – போலி ஆள் சேர்த்து விளம்பரம் தேடும் திமுக.. வெளுத்து வாங்கிய தவெக நிர்வாகி!

மேலும், “இன்றைய டிஜிட்டல் உலகில் எல்லாவற்றையும் முழுமையாக முடக்கிவிட்டால் நீங்கள் குகைக்குள் வாழ வேண்டியதுதான். எங்கே எல்லைக் கோடு வரைவது என்பதைச் சட்டம் தெளிவாக வரையறுக்க வேண்டும். ஆளுமை உரிமை என்ற பெயரில் ஒட்டுமொத்த இணையத்தையும் முடக்க முடியாது” என்று நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்தது.

ஜான்வி கபூர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4,000-க்கும் மேற்பட்ட லிங்க்குகளில் எவை உண்மையான ஆபாச உள்ளடக்கம், எவை வணிக ரீதியாகப் பயன்படுத்தப்பட்டவை மற்றும் எவை வெறுமனே ரசிகர் பக்கங்கள் என வகைப்படுத்தித் தனி அட்டவணையாகச் சமர்ப்பிக்குமாறு ஜான்வி கபூரின் வழக்கறிஞருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.