தவறுதலாக வேறு ஒருவருக்கு UPI பணம் அனுப்பிவிட்டீர்களா? பணத்தை மீட்டெடுப்பது எப்படி? முழு வழிகாட்டி!

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் பயன்பாடு வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 4.1 சதவீதமும், அதன் மொத்த மதிப்பு 3.3 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதன்படி, ரூ.29.88 டிரில்லியன் மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடைபெற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த வேகமான சூழலில், அவசரத்திலோ அல்லது கவனக்குறைவாலோ தவறான நபரின் UPI ஐடி அல்லது மொபைல் எண்ணிற்குப் பணத்தை அனுப்பிவிட்டுத் தவிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தவறுதலாக வேறு ஒருவருக்குப் பணம் சென்றுவிட்டால் உடனடியாகப் பதற்றமடையத் தேவையில்லை. அந்தப் பணத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன. நீங்கள் பயன்படுத்திய UPI செயலியிலுள்ள ‘Help’ அல்லது ‘Support’ பகுதிக்குச் சென்று, குறிப்பிட்ட பரிவர்த்தனையைத் தேர்வு செய்து உடனடியாகப் புகார் பதிவு செய்ய வேண்டும். மேலும், எதிர்காலக் குறிப்பிற்காகப் புகார் எண் (Complaint Reference Number) மற்றும் பரிவர்த்தனை ஆதாரங்களைச் சேமித்து வைத்துக்கொள்வது அவசியம். ஒருவேளை ஆன்லைன் சைபர் மோசடிகளால் பணத்தை இழந்திருந்தால், உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் உதவி எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.

புகார் அளிப்பதற்கு UTR / Transaction ID, பரிவர்த்தனை நடந்த தேதி மற்றும் நேரம், அனுப்பப்பட்ட தொகை, தவறான நபரின் UPI ID / மொபைல் எண் மற்றும் பரிவர்த்தனைக்கான ஸ்கிரீன்ஷாட்கள் ஆகியவை மிக முக்கியமாகும். இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க, பணத்தை அனுப்பும் முன் பெறுநரின் பெயர் மற்றும் UPI ஐடியை இருமுறை சரிபார்ப்பதுடன், அவசரமின்றி நிதானமாக PIN எண்ணைப் பதிவிட வேண்டும்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கூகுள் பே 'பாக்கெட் மணி' (Pocket Money) வசதி உண்மையிலேயே மோசடியா? அதிரடி உண்மை விளக்கம்!

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தொடர்புகொள்ள முதன்மை UPI செயலிகளின் வாடிக்கையாளர் சேவை எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • PhonePe (போன்பே): 08068727374

  • Google Pay (கூகுள் பே): 18004190157

  • Paytm (பேடிஎம்): 01204456456

  • BHIM UPI (பீம்): 180012001740

செயலி நிறுவனங்களின் மூலம் தீர்வு கிடைக்காத பட்சத்தில், NPCI (National Payments Corporation of India) அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களைப் பதிவு செய்ய முடியும்.