வங்கிகளின் சேவைக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த ஒம்புட்ஸ்மேன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ₹33 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும். தவறான பணப் பரிவர்த்தனைகள், கணக்கு முடக்கம் மற்றும் வங்கிகளின் அலட்சியத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் மிக எளிதாக நிவாரணம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை, தனியார் வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (NBFC) மற்றும் பணப் பரிவர்த்தனை அமைப்புகளின் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அதை எதிர்த்துக் கேள்வியெழுப்ப வாடிக்கையாளர்களுக்கு முழு உரிமை உள்ளது. பல நேரங்களில் வங்கியின் தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் வாடிக்கையாளர்கள் பெரும் நிதி இழப்பையும் மன உளைச்சலையும் சந்திக்க நேரிடுகிறது. இத்தகைய பாதிப்புகளிலிருந்து வாடிக்கையாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவே இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒருங்கிணைந்த ஒம்புட்ஸ்மேன் திட்டத்தைச் (RB-IOS) செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வங்கியின் சேவைக்குறைபாட்டால் ஏற்படும் நேரடி நிதி இழப்புகளுக்கு (Consequential Financial Loss) அதிகபட்சமாக ₹30 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும். இதுதவிர, வங்கியின் அலட்சியத்தால் வாடிக்கையாளருக்கு ஏற்படும் நேர விரயம், அலைச்சல் மற்றும் மன உளைச்சலுக்குத் (Loss of Time and Mental Agony) தனியாக ₹3 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படுகிறது. இதன்படி, ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சமாக ₹33 லட்சம் வரை இழப்பீடாகப் பெற வாய்ப்புள்ளது.
இழப்பீடு பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் முதலில் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்க வேண்டும். வங்கி நிர்வாகம் அந்தப் புகாரை நிராகரித்தாலோ, அல்லது புகார் அளித்த 30 நாட்களுக்குள் உரியத் தீர்வு வழங்கத் தவறினாலோ, வாடிக்கையாளர்கள் உடனடியாக ரிசர்வ் வங்கியின் ஒம்புட்ஸ்மேன் அமைப்பை அணுகலாம். ஆர்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் (cms.rbi.org.in) மூலமாகவோ அல்லது மின்அஞ்சல் மூலமாகவோ தேவையான ஆவணங்களை இணைத்துப் புகாரைப் பதிவு செய்து உரிய நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.





