“உங்களைக் கண்டுபிடிப்போம்”: மினாப் பள்ளி தாக்குதல் விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளுக்கு ஈரான் மிரட்டல்!

ஈரானின் மினாப் (Minab) நகரில் உள்ள பள்ளி மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி 168 குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் எட்டு மாதங்களுக்கு முந்தைய பதிவை மீண்டும் பகிர்ந்து, “உங்களைக் கண்டுபிடிப்போம்” (We will find you) என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

அந்தப் பதிவில், யுஎஸ்எஸ் ஸ்ப்ரூன்ஸ் (USS Spruance) போர்க்கப்பலின் கமாண்டிங் அதிகாரியான கமாண்டர் லீ ஆர் டேட் மற்றும் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் ஜெஃப்ரி இ யார்க் ஆகியோரைக் குற்றவாளிகள் என ஈரான் குறிப்பிட்டுள்ளது. கடந்த மார்ச் 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்தப் பழைய பதிவில், மினாப் பள்ளியின் மீது மூன்று முறை டோமாஹாக் ஏவுகணைகளை வீச உத்தரவிட்டது இவர்கள் இருவரும் தான் என்றும், அவர்களுக்குக் குழந்தைகள் இல்லையா என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அமெரிக்க உயரதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரான் நீண்ட காலம் இருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்த மறுநாளே இந்த மிரட்டல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, தெஹ்ரானுடன் தொடர்புடைய தொடர் கொலை மிரட்டல்கள் காரணமாக, அமெரிக்க ரகசிய சேவைப் பிரிவின் அறிவுறுத்தலின் பேரில் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தனது இல்லத்திலிருந்து ராணுவத் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்காத அமெரிக்கா; ஏஐ (AI) சர்ச்சை

இதற்கிடையில், 2026 உலக உச்சிமாநாட்டில் பேசிய ஈரான் உச்சத் தலைவரின் பிரதிநிதி அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி, பிப்ரவரி 28-ஆம் தேதி ஷஜரே தையெபே தொடக்கப்பள்ளி மீது நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதலுக்கு அமெரிக்கா இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை எனக் குற்றம் சாட்டினார். உயிரிழந்த சில குழந்தைகளின் உடல்கள் இன்றுவரை கிடைக்காததால் பெற்றோர்கள் அழுவதற்குக் கல்லறை கூட இல்லாமல் தவிப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.

அதே மாநாட்டில் பேசிய அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) முன்னாள் இயக்குநர், இந்தத் தாக்குதலில் இலக்கைத் துல்லியமாகக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உதவியது உண்மைதான் என்றாலும், இறுதி முடிவை எடுத்து தாக்குதலை நடத்தியது மனிதர்தான் என விளக்கமளித்துள்ளார்.