கர்நாடகாவில் அதிர்ச்சி! 7,000 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று: கல்லூரிகளில் கட்டாயப் பரிசோதனை முகாம்!

கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே ஹெச்.ஐ.வி (HIV) தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய சுகாதாரத்துறை ஆய்வுகளின் படி, இந்த குறிப்பிட்ட வயதினரில் 7,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அம்மாநில பொதுமக்களிடையேயும், சுகாதாரத்துறையினரிடையேயும், பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இந்த ஆபத்தான போக்கைக் கட்டுப்படுத்தவும், ஆரம்ப கட்டத்திலேயே தொற்றைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கவும் கர்நாடக அரசு உடனடியாக அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன்படி, அம்மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களிலும் கட்டாய ஹெச்.ஐ.வி பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு ஆலோசனைக் முகாம்களை நடத்த மாநில அரசு அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த முகாம்கள் மூலம் மாணவர்களுக்குத் தேவையான மருத்துவ வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்நாடக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, மாநிலம் முழுவதும் தற்போது சுமார் 2.60 லட்சம் பேர் ஹெச்.ஐ.வி பாதிப்புடன் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உடலுறவு, போதைப் பழக்கம் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை போன்றவை இந்தத் தொற்று பரவுவதற்கு முக்கியக் காரணங்களாக இருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  பெங்களூரில் அணை வேணும், சென்னையில் எதிர்ப்பு! பாஜகவின் இரட்டை வேடக் காவிரி கொள்கை அம்பலம்!

எனவே, கல்லூரி அளவிலான இந்த சிறப்பு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம்கள் மூலம் நோய் தொற்றை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான ஏ.ஆர்.டி (ART) சிகிச்சைகளை வழங்கித் தொற்றின் தீவிரத்தைக் குறைக்க முடியும் என்று அம்மாநிலச் சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களும் இளைஞர்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.