இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறான உள்ளடக்கங்களைப் பரப்பி வந்த சுமார் 1.6 லட்சம் இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்குகளை மெட்டா நிறுவனம் அதிரடியாக முடக்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல்களை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களும், உள்ளடக்கங்களும் அதிகளவில் பகிரப்பட்டு வருவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்குப் புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, இத்தகைய சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கத் தவறியதற்காகவும், ஐடி விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்காததற்காகவும் மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு அண்மையில் கடுமையான எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தது.
மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனம் தனது தளங்களில் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டது. குறிப்பாக, மனிதர்களின் தலையீடு இன்றி தானியங்கி முறையில் (AI Bots) இயங்கி, தவறான விளம்பரங்களை பரப்பி வந்த கணக்குகளைக் கண்டறிய அதிநவீன மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் பாதுகாப்பு விதிகளை மீறியது கண்டறியப்பட்டதை அடுத்து, கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 1 லட்சத்து 60 ஆயிரம் இன்ஸ்டாகிராம் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ள மெட்டா நிறுவனம், “எங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பயோ-பாதுகாப்பு விதிகளுக்கு மாறான உள்ளடக்கங்கள் இடம்பெறுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. பயனர் பாதுகாப்பு, குறிப்பாகக் குழந்தைகளின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. எங்களின் தளங்களை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில், தவறான உள்ளடக்கங்களை முன்கூட்டியே கண்டறிந்து நீக்கும் தொழில்நுட்பப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளது.