மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுத் துறைத் தேர்வில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு விவகாரத்தில், காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரேக்கப் காரணமாகப் மிகப்பெரிய லஞ்ச மோசடி அம்பலமாகியுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலிக்கு அரசு வேலை வாங்கித் தர வேண்டும் என்பதற்காக ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுத்து வினாத்தாளை வாங்கிய காதலன், தனக்கு பிரேக்கப் ஆன ஆத்திரத்தில் தேர்வாணையத்திடம் ரகசியமாக புகார் அளித்துக் காட்டி கொடுத்ததன் பேரில்தான் இந்த ஒட்டுமொத்த முறைகேடும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மகாராஷ்டிர மாநில தேர்வாணையம் (MPSC) சார்பாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் (FDA) காலியாக உள்ள 154 மருந்து ஆய்வாளர் (Drug Inspector) பணியிடங்களை நிரப்புவதற்காகக் கடந்த மார்ச் 22-ஆம் தேதி மாநிலம் முழுவதும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 44,500 தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் வெளியாகி, மாநில அளவில் 7-வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்ற ருதுஜா பாட்டில் என்ற பெண் நேர்முகத் தேர்விற்குத் தேர்வானார். ஆனால் தேர்வு முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காதலன் லோகேஷ் என்ற கெளரவ் பாட்டில் என்பவரை விட்டு அந்தப் பெண் பிரியத் தீர்மானித்துள்ளார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த கெளரவ் பாட்டில், காதலிக்கு அரசு வேலை கிடைத்தால் தன்னை நிரந்தரமாக மறந்துவிடுவார் என்ற பயத்தில், MPSC தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்குத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துவிட்டது எனப் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற் கொண்ட மும்பை குற்றப்பிரிவு காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தியதில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. கெளரவ் பாட்டில் தனது காதலியின் தந்தை அம்ருத் பாட்டில் மூலம் தரகர் பிரவீன் பாட்டிலை அணுகி, தேர்வாணையத்தில் உள்ள உதவிப் பிரிவு அலுவலர்கள் மற்றும் துணைச் செயலாளர் உட்பட 3 அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுத்து தேர்வு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வினாத்தாளைப் பெற்றது தெரியவந்தது.
புகார் அளித்த கெளரவ் பாட்டிலும் இந்த வினாத்தாளைப் பெற்றுத் தன் சகோதரருக்குக் கொடுத்து எழுத வைத்ததும், விசாரணையில் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்து புகாரைத் திரும்பப் பெற முயன்றதும் போலீஸாரின் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, லஞ்சம் வாங்கி வினாத்தாளைக் கசியவிட்ட 3 அரசு அதிகாரிகள், இடைத்தரகர், பெண்ணின் தந்தை மற்றும் புகார் அளித்த காதலன் கெளரவ் பாட்டில் என மொத்தம் 6 பேரை மும்பை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மோசடி உறுதியானதைத் தொடர்ந்து, இந்த மருந்து ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு செயல்முறைகள் அனைத்தையும் ரத்து செய்து MPSC தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.





