டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு மெகா வாய்ப்பு! இந்தியன் ஆயில் & இரயில்வேயில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிய விரும்புவோருக்கு ஒரே நேரத்தில் இரண்டு மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முன்னணி எரிபொருள் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) மற்றும் இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கொங்கன் இரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (KRCL) ஆகிய நிறுவனங்கள் இணைந்து 560-க்கும் மேற்பட்ட அப்பரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளன. ஐடிஐ, பல்வேறு பொறியியல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ, பி.இ, பி.டெக் மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு அரசுத் துறையில் நேரடியாகத் தொழிற்பயிற்சி பெற்று தங்களது தொழில்முறை அனுபவத்தை உயர்த்திக் கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்: 433 பணியிடங்கள் மற்றும் கல்வித்தகுதிகள்

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் டெல்லி சந்தைப்படுத்துதல் பிரிவில் வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பட்டதாரி பிரிவுகளில் மொத்தம் 433 அப்பரண்டிஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் டிரேட் அப்பரண்டிஸ் பிரிவில் 104 இடங்களும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பிரிவில் 69 இடங்களும், டெக்னீசியன் அப்பரண்டிஸ் பிரிவில் 156 இடங்களும், கிராஜுவேட் அப்பரண்டிஸ் பிரிவில் 104 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், ஃபிட்டர், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட் போன்ற துறைகளில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்தவர்களும், குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.ஏ, பி.காம், பி.எஸ்சி, பி.பி.ஏ போன்ற பட்டப்படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "இந்தியாவில் நிராகரிப்பு... அமெரிக்காவில் வேலை!" – மைக்ரோசாஃப்ட் இன்ஜினியரின் வைரல் வெற்றிப் பயணம்!

விண்ணப்பதாரர்கள் 2026 ஆகஸ்ட் 31-ஆம் தேதியின்படி 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும். தகுதியுடைய நபர்கள் என்ஏபிஎஸ் (NAPS) அல்லது என்ஏடிஎஸ் (NATS) இணையதள போர்ட்டல்கள் மூலமாகச் செப்டம்பர் 6, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கொங்கன் இரயில்வே கழகம்: 134 இடங்களுக்கு நேரடிச் சான்றிதழ் சரிபார்ப்பு

கொங்கன் இரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மும்பை மண்டலத்தில் 134 பொறியியல் மற்றும் பட்டதாரி அப்பரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பி.இ அல்லது பி.டெக் முடித்த பட்டதாரிகளுக்கு 80 இடங்களும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு 54 இடங்களும் காலியாக உள்ளன. சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் ஆகிய பொறியியல் பிரிவுகளுடன் பொதுப் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இதில் அடங்குவர். 2021, 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கும் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு முறையே 5 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு. தேர்வாகும் பட்டதாரி அப்பரண்டிஸ்களுக்கு மாதம் 6,150 ரூபாயும், டிப்ளமோ அப்பரண்டிஸ்களுக்கு மாதம் 5,450 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படும். தகுதியுடைய நபர்கள் என்ஏடிஎஸ் போர்ட்டலில் பதிவு செய்துவிட்டு, வரும் ஆகஸ்ட் 24, 25, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மும்பை சீவுட்ஸ் இரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள எக்சிகியூட்டிவ் கிளப்பில் நடைபெறும் நேரடிச் சான்றிதழ் சரிபார்ப்பு முகாமில் பங்கேற்க வேண்டும்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நாளை கரூர் வருகிறார் முதல்வர் விஜய்! 10 கி.மீ மெகா ரோடு ஷோ! ரூ.1,700 கோடி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்!

தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள்

இந்த இரண்டு வேலைவாய்ப்புகளுக்குமே எவ்வித எழுத்துத் தேர்வும் அல்லது நேர்முகத் தேர்வும் கிடையாது என்பது இதன் சிறப்பு அம்சமாகும். விண்ணப்பதாரர்கள் தங்களது பள்ளி, கல்லூரி அல்லது பட்டயப் படிப்புகளில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுத் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியான இளைஞர்கள் உரிய காலக்கெடுவிற்குள் அதிகாரப்பூர்வ இணையதள போர்ட்டல்கள் வாயிலாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.