“இந்தியாவில் நிராகரிப்பு… அமெரிக்காவில் வேலை!” – மைக்ரோசாஃப்ட் இன்ஜினியரின் வைரல் வெற்றிப் பயணம்!

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிராகரிப்பும் (Rejection) நம்மை மேலும் ஒரு பெரிய வெற்றிப் பாதைக்குத்தான் அழைத்துச் செல்கிறது என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது ஒரு இந்திய பெண் இன்ஜினியரின் கதை. இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அளித்த நிராகரிப்பால் அமெரிக்காவிற்குச் சென்று, இன்று அதே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அமெரிக்கத் தலைமை அலுவலகத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியில் சேர்ந்த பிரச்சிதி பார்கரின் (Prachiti Parkar) நெகிழ்ச்சியான பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மும்பையில் உள்ள புகழ்பெற்ற வீர்மாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப நிறுவனத்தில் (VJTI) கணினிப் பொறியியலில் பி.டெக் (B.Tech) பட்டம் பெற்றவர் பிரச்சிதி பார்கர். இவர் தனது மேற்படிப்பிற்காக அமெரிக்காவிற்குச் செல்வதற்கு முன்பாக, இந்தியாவில் உள்ள மைக்ரோசாஃப்ட் கிளையில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். ஒருவேளை இந்தியாவில் அந்த வேலை கிடைத்திருந்தால், அமெரிக்கா செல்லும் திட்டத்தையே முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு இந்தியாவிலேயே பணியில் சேர்ந்திருப்பேன் என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் நடத்திய நேர்காணலில் அவர் நிராகரிக்கப்பட்டார். இந்த நிராகரிப்பு அவருக்குத் தற்காலிக ஏமாற்றத்தைக் கொடுத்த போதிலும், திட்டமிட்டபடி அவர் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் (University of Massachusetts Amherst) கணினி அறிவியலில் எம்.எஸ் (M.S.) பட்டப்படிப்பில் சேர்ந்தார். அங்குத் தனது தொடர் முயற்சியாலும் திறமையாலும் 4.0 GPA என்ற முழுமையான மதிப்பெண் பெற்றுப் படிப்பை மிகச் சிறப்பாக நிறைவு செய்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஆப்பிள் வேலையை உதறிவிட்டு... வெறும் 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் 1,000 கோடி நிறுவனத்தை உருவாக்கிய இந்திய இளைஞர்! பின்னணி என்ன?

தனது எம்.எஸ் படிப்பை வெற்றிகரமாக முடித்த கையோடு, கடந்த மே மாதம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் அமைந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலேயே சாஃப்ட்வேர் இன்ஜினியராக பிரச்சிதி பார்கர் பணியில் சேர்ந்தார். இந்தியாவில் எந்த நிறுவனம் தன்னை நிராகரித்ததோ, அதே சர்வதேச நிறுவனத்தின் அமெரிக்கத் தலைமையகத்திலேயே அவருக்கு வேலை கிடைத்தது அவரது விடாமுயற்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.

இந்நிலையில், சமீபத்தில் வாஷிங்டனில் உள்ள தனது பிரமாண்டமான மைக்ரோசாஃப்ட் அலுவலக வளாகத்திற்குத் தனது பெற்றோரை அவர் நேரில் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினார். வழக்கமாக என் பெற்றோரிடம் என்னை நினைத்துப் பெருமைப்படுகிறீர்களா என்று கேட்பேன், ஆனால் இந்த முறை நான் அவர்களிடம் கேட்கவே இல்லை. அவர்களின் முகத்தில் இருந்த புன்னகையே எனக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டது. இந்தியாவில் அன்று மைக்ரோசாஃப்ட் என்னை நிராகரிக்காமல் இருந்திருந்தால் இன்று நான் இந்த உயர் நிலையை அடைந்திருக்கவே முடியாது என்று அவர் நெகிழ்ச்சியுடன் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Trump Drops 20% Shipping Toll: "வரியும் இல்ல.. கட்டணமும் இல்ல!" ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் பல்டி அடித்த டிரம்ப்!

பிரச்சிதி பார்கரின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விடாமுயற்சியும் உழைப்பும் இருந்தால் எந்தவொரு தோல்வியையும் மிகப்பெரிய வெற்றியாக மாற்ற முடியும், நிராகரிப்புகளைக் கண்டு சோர்ந்துபோகும் இளம் தலைமுறையினருக்கு இது மிகப்பெரிய ஊக்கம் என்று நெட்டிசன்கள் பலரும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.