உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தை குறித்து முன்னணி கார்டு தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் (NVIDIA) தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹூவாங் (Jensen Huang) வெளியிட்ட கருத்துகள் உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
AI புரட்சி காரணமாக வரவிருக்கும் காலத்தில் மென்பொருள் பொறியாளர்களை (Software Engineers) விட, பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள், மற்றும் தச்சர்கள் போன்ற உள்கட்டமைப்பு சார்ந்த பணிகளைச் செய்யும் தொழிலாளர்களுக்கே மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் பெருகும் என அவர் திட்டவட்டமாகக் தெரிவித்துள்ளார்.
கோடி கணக்கிலான மக்கள் மென்பொருள் குறியீடுகளை (Coding) எழுதக் கற்றுக்கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், செயற்கை நுண்ணறிவு மாடல்களே சுயமாகக் கோடிங் செய்யும் திறனைப் பெற்று வருகின்றன. இருப்பினும், இந்த AI தொழில்நுட்பங்கள் இயங்குவதற்குத் தேவையான பிரம்மாண்டமான டேட்டா சென்டர்கள் (Data Centers), குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் பிரம்மாண்ட மின் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு மனிதர்களின் கைவினைத் திறன்களும், உழைப்பும் நேரடியாகத் தேவைப்படுகின்றன. இதன் காரணமாகவே, இயற்பியல் சார்ந்த உள்கட்டமைப்புத் தொழிலாளர்களின் (Blue-Collar Skilled Workers) தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரிக்கவுள்ளது என ஜென்சன் ஹூவாங் விளக்கியுள்ளார்.
இந்த உள்கட்டமைப்புப் புரட்சியின் ஒரு பகுதியாக, முன்னணி ஏஐ நிறுவனமான ஓபன் ஏஐ (OpenAI) அமைப்பின் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருமளவில் மேம்படுத்துவதற்காகச் சுமார் ரூ.8.65 லட்சம் கோடி ($100 Billion) மதிப்பில் பிரம்மாண்டமான முதலீட்டு ஒப்பந்தத்தில் என்விடியா நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
AI தொழில்நுட்பத்தைக் கட்டமைக்க பிரம்மாண்டமான வன்பொருள் (Hardware) மற்றும் மின்சார உள்கட்டமைப்புகள் தேவைப்படும் என்பதால், எதிர்காலத்தில் தொழில்நுட்பத் துறையில் திறமையான எலக்ட்ரீஷியன்கள் மற்றும் கட்டுமான வல்லுநர்களுக்கே மிகப்பெரிய நல்வாய்ப்புகளும், அதிக ஊதியமும் கிடைக்கவுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.





