“BSNL – Vodafone Idea மெகா கூட்டணி!” – நெட்வொர்க் சிக்னல் பிரச்சனைக்கு எண்ட் கார்டு: வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி!

இந்தியத் தொலைத்தொடர்புச் சந்தையில் நிலவும் கடும் போட்டியை எதிர்கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்குச் தடையற்ற அதிவேக நெட்வொர்க் சேவையை வழங்கிடவும் அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா (V!) ஆகியவை கரம் கோர்த்துள்ளன. இரு நிறுவனங்களுக்கும் இடையே உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்து கொள்வதற்கான முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த புதிய கூட்டு ஒப்பந்தத்தின் கீழ், இரு நிறுவனங்களும் தங்களுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு டவர்கள் (Mobile Towers) மற்றும் ஆப்டிகல் ஃபைபர் (Optical Fiber Network) கட்டமைப்புகளைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவுள்ளன. இதன் மூலம் குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் நெட்வொர்க் கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூரப் பகுதிகளில் சிக்னல் வலிமை அதிகரிக்கும். இதனால் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் அடிக்கடி அழைப்புத் துண்டிக்கப்படுவது (Call Drops) மற்றும் மெதுவான இணைய சேவை போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கள் சொந்த உள்கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், புதிய டவர்களை அமைப்பதற்கான பல நூறு கோடி ரூபாய் செலவு இரு நிறுவனங்களுக்கும் கணிசமாகக் குறையும். மேலும், பயன்படுத்தப்படாத உள்கட்டமைப்புகளை மற்ற நிறுவனத்திற்கு அனுமதிப்பதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் கூடுதல் வாடகை வருவாயும் கிடைக்கும்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Today GoldRate: சடசடவென மாறிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய ரேட் பார்த்து வாங்குங்க!

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில், BSNL மற்றும் V! நிறுவனங்களின் இந்த வியூகக் கூட்டணி தொலைத்தொடர்புத் துறையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. 5ஜி மற்றும் 4ஜி சேவை விரிவாக்கத்தில் இந்த உள்கட்டமைப்பு பகிர்வு இரு நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.