ஐடி துறையில் முன்னணியில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், தனது ஊழியர்களின் லேப்டாப்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தேசிய ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, நிறுவனத்தால் வழங்கப்படும் அலுவலக லேப்டாப்களில் டிஜிட்டல் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் கண்காணிப்பு மென்பொருள்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஊழியர்கள் பயன்படுத்தும் செயலிகள் மற்றும் அவற்றில் செலவிடும் நேரம் ஆகியவை கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்தச் செய்தி ஐடி ஊழியர்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் உருவாக்கியது.
இந்த விவகாரம் தொடர்பாகத் தற்போது டிசிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழியர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளை நிறுவனம் கண்காணிக்கிறது என்று வெளியாகும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை மற்றும் தவறானவை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. நிறுவனம் எப்போதும் தனது ஊழியர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் ரகசியத்தன்மையையும் மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நிறுவனத்தின் நெட்வொர்க் செயல்திறனைப் பரிசீலிக்கவும், தகவல் பாதுகாப்பை உறுதி செய்யவும், பயனர்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்கவும் மட்டுமே பல்வேறு தொழில்நுட்பச் சாதனங்கள் மற்றும் மென்பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களது அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் ரகசியத் தகவல்கள் கசியாமல் தடுப்பதற்காக இதுபோன்ற பாதுகாப்பு கருவிகளைப் பயன்படுத்துவது வழக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சமீபகாலமாக ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் கணினிப் பயன்பாடு, விசைப்பலகை இயக்கம் மற்றும் மவுஸ் நகர்வுகள் ஆகியவை பதிவு செய்யப்படுவதாக எழும் புகார்கள் ஊழியர்களின் பணிச் சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. இத்தகைய சூழலில், தனது நெட்வொர்க் பாதுகாப்பிற்காக மட்டுமே கண்காணிப்புக் கருவிகள் பயன்படுத்தப்படுவதாக டிசிஎஸ் அளித்துள்ள விளக்கம் ஊழியர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
ஊழியர்களின் கணினிகளை அவர்களின் அனுமதி இன்றியோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ கண்காணிப்பது உலகளவில் சட்டவிரோதமான செயலாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுத் தரவுப் பாதுகாப்பு விதியின்படி (GDPR), ஊழியர்களின் விசைப்பலகை இயக்கம், திரைப் பதிவுகள் அல்லது கேமரா வழியாக அவர்களின் அனுமதியின்றி கண்காணிப்பது கடுமையான குற்றமாகும். இதன் காரணமாகச் ஜெர்மனியில் எச் அண்ட் எம் நிறுவனம் ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்ததற்காக சுமார் 35.25 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 315 கோடி ரூபாய்) அபராதமாகச் செலுத்தியது. பிரான்சில் அமேசான் ஃபிரான்ஸ் நிறுவனம் ஊழியர்களின் ஒவ்வொரு விநாடி செயல்பாட்டையும் மிகக் கடுமையாகக் கண்காணித்ததற்காக 32 மில்லியன் யூரோக்கள் அபராதம் செலுத்தியது. மேலும் ஜெர்மனியைச் சேர்ந்த நோட்புக்ஸ்பிலிகர் நிறுவனம் ஊழியர்களைக் கேமரா மூலம் கண்காணித்ததற்காக 10.4 மில்லியன் யூரோக்கள் அபராதம் செலுத்தியது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 72A மற்றும் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP Act 2023) மூலம் ஊழியர்களின் தரவு ரகசியத்தன்மை பாதுகாக்கப்படுகிறது. நிறுவனங்கள் தங்களின் நெட்வொர்க் பாதுகாப்பிற்கு மட்டுமே கண்காணிப்பு கருவிகளைப் பயன்படுத்த அனுமதி உண்டு. இந்தியாவில் நிறுவனத்தின் சொந்த லேப்டாப்பில் நெட்வொர்க் பாதுகாப்பிற்காக மென்பொருள் பயன்படுத்துவதற்கு இதுவரை தனியாக அபராதம் விதிக்கப்படவில்லை. உலகிலேயே ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தான் ஊழியர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதில் மிகக் கடுமையான மற்றும் சிறந்த சட்டங்களைக் கொண்டுள்ளன.





