200 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பெண் குழந்தை! தேரில் வைத்து ராஜ வரவேற்பு அளித்த குடும்பம்!

மகாராஷ்டிர மாநிலம் பீடு மாவட்டத்தில் உள்ள பர்லி பகுதியில் வசசித்து வரும் லிம்பாஜி தஹிஃபலேவின் குடும்பத்தில், கடந்த 200 ஆண்டுகளாக அதாவது சுமார் நான்கு தலைமுறைகளாக ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை. இந்த நிலையில், அக்குடும்பத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் தஹிஃபலே என்பவரின் மனைவிக்கு அண்மையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. நான்கு தலைமுறை காத்திருப்புக்குப் பிறகு தங்கள் வம்சத்தில் உதித்த முதல் பெண் குழந்தை என்பதால், அக்குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது.

மருத்துவமனையிலிருந்து தாய் மற்றும் சேயை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் நிகழ்வை, அக்குடும்பத்தினர் ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாடித் தீர்த்துள்ளனர். குழந்தைக்கு வேதகாலப் தத்துவஞானியான ‘கார்க்கி’யின் பெயரைச் சூட்டிய குடும்பத்தினர், அக்குழந்தையைச் சாதாரண காரில் அழைத்துச் செல்லாமல், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். மேளதாளங்கள், தாரை தப்பட்டை முழங்க, உறவினர்களும் கிராம மக்களும் நடனமாடிக் கொண்டே குழந்தையைத் தேரில் வைத்து வீதி வீதியாக அழைத்துச் சென்று ராஜ வரவேற்பு அளித்தனர்.

இது குறித்து உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய குழந்தையின் தாத்தா லிம்பாஜி தஹிஃபலே, “எங்கள் குடும்பத்தில் கடந்த நான்கு தலைமுறைகளாகப் பெண் குழந்தையே பிறக்கவில்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மகாலட்சுமியே எங்கள் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தது போல் உணர்கிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். குழந்தைப் பேறு மற்றும் பெண் குழந்தைகள் மீதான சமூகத்தின் குறுகிய மனப்பான்மைக்கு மத்தியில், ஒரு பெண் குழந்தையின் பிறப்பை இவ்வளவு விமரிசையாகக் கொண்டாடிய தஹிஃபலே குடும்பத்தினரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வைரலாகி வருகிறது.