செப்டம்பர் 11 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்! 5 நாள் வேலை கேட்டு நாடு தழுவிய போராட்டம்!

வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்பது உட்படப் பல்வேறு நீண்டகாலக் கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்தக் கோரி, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான UFBU (United Forum of Bank Unions) சார்பாக வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார்த் துறை வங்கிகளின் ஊழியர் சங்கங்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஒருங்கிணைந்த அமைப்பான UFBU, வங்கித் துறையில் வாரத்தில் 5 நாள் வேலை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தொடர்ச்சியாக மத்திய அரசிடமும், இந்திய வங்கிகள் சங்கத்திடமும் (IBA) வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாக அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் செப்டம்பர் 11 அன்று நடைபெறவுள்ள இந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காசோலை பரிவர்த்தனைகள் (Cheque Clearance), நேரிடைக் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி கிளைப் பணிகள் ஸ்தம்பிக்கக் கூடும் என்பதால், வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையாகத் தங்களது அத்தியாவசிய பணப் பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதேவேளையில், ஏடிஎம் (ATM) சேவைகள் மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் (Net Banking / Mobile Banking) வழக்கம்போல் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பண டெபாசிட் மற்றும் கிளை சார்ந்த சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போராட்டம் குறித்த மேலதிக அறிவிப்புகளை வங்கிச் சங்கங்கள் விரைவில் வெளியிடும் எனத் தெரிகிறது.