பிரபல பங்குச்சந்தை வர்த்தகரும், தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது தனியார் தொலைகாட்சி பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் புகாரின் அடிப்படையில், அவரைச் சென்னை ஐஸ்ஹவுஸ் காவல் துறையின் தனிப்படை போலீசார் பெங்களூருவில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ள புகாரின் விவரங்களின்படி, வேலை வாய்ப்பு கோரி பி.ஆர். சுந்தரைச் சந்தித்த அந்தப் பெண் செய்தி வாசிப்பாளரிடம் அவர் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது குடியிருப்புக்கு அவரை வரவழைத்து தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பி.ஆர். சுந்தரின் மனைவியிடம் புகார் தெரிவித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர், நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதாகக் கூறி, கடந்த ஜூன் 29 அன்று தனது அலுவலகத்திற்கு அந்தப் பெண்ணை வரவழைத்த பி.ஆர். சுந்தர், அங்குள்ள ஒரு அறையில் அவரை சுமார் 3 மணி நேரம் சட்டவிரோதமாகப் பூட்டி வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததோடன்றி, கடுமையான அச்சுறுத்தல்களையும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் பாலியல் தொல்லை, சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட 5 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் ஐஸ்ஹவுஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த பி.ஆர். சுந்தரைச் சென்னை தனிப்படை போலீசார் அங்கு சென்று கைது செய்து, மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடைமுறைகளுக்காகச் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





