லாட்டரி அதிபர் சான்டியாகோ மார்ட்டினின் குடும்ப உறுப்பினர்கள், வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மூன்று வெவ்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் களம் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகளில் தங்களின் அரசியல் பயணத்தைத் தொடங்கியிருப்பதை ஒரு “பன்முகப்படுத்தப்பட்ட அரசியல் முதலீடாக” (Diversified Political Portfolio) அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்தத் தேர்தலில் அதிக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளராக முன்னணியில் இருப்பவர் சான்டியாகோ மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின். இவர் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். சுமார் ₹1,049 கோடி மதிப்பிலான சொத்துகளைத் தனது வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலமாக இந்திய ஜனநாயகக் கட்சியில் (IJK) இருந்த அவர், சமீபத்தில் அதிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி தேர்தல் களத்தைப் பொறுத்தவரை… மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தான் தொடங்கிய லட்சிய ஜனநாயக கட்சி (LJK) சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்து காமராஜ் நகர் மற்றும் நெல்லிதோப்பு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். ₹597 கோடி சொத்து மதிப்புடன் புதுச்சேரி மாநிலத்தின் மிகப்பெரிய கோடீஸ்வர வேட்பாளராக அவர் உருவெடுத்துள்ளார். சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற தரத்திற்குப் புதுச்சேரியை உயர்த்துவதே தனது இலக்கு என அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில்… நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) பொதுச் செயலாளரான சான்டியாகோ மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா களம் காண்கிறார். தவெக-வின் முக்கிய வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வரும் அவர், சென்னை மாநகரத்தின் முக்கிய தொகுதியான வில்லிவாக்கத்தில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் மார்ட்டின் குடும்பத்தின் செல்வாக்கு அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் தவெக என மூன்று முனைகளிலும் பரவியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு துருவங்களாக இருக்கும் கட்சிகளில் போட்டியிடுவது குறித்துப் பல விமர்சனங்கள் எழுந்தாலும், “ஒரே கையில் உள்ள ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை; ஒவ்வொருவருக்கும் தனித்தனி கொள்கைகள் உண்டு” என்று ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் விளக்கம் அளித்துள்ளார். மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது, இந்த “அரசியல் முதலீடு” எந்த அளவிற்குப் பலன் தரும் என்பது தெரியவரும்.