6 காட்சிகள் திரையிட அரசு அனுமதி.. “இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா முதலமைச்சரே?” – சீமான் பாய்ச்சல்!

புதிய திரைப்படங்கள் திரையிடப்படும்போது அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையரங்குகளில் திரையிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் இந்த முடிவு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் நல்வாழ்விற்கு எதிரானது எனக் குறிப்பிட்டு அவர் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போதைக்கும், பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து, வளர்ந்திருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், “புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள அரசின் அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது” என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதைத் விடுத்து, சினிமா திரையிடல் நேரங்களை நீட்டிப்பதில் அரசு காட்டும் ஆர்வம் தவறான முன்னுதாரணம் என அவர் சாடினார். “இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா முதலமைச்சர் அவர்களே?” என்றும் அவர் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில் அதிகாலை 6 மணி முதல் இரவு 2:30 மணிக்குள் 6 காட்சிகள் வரை திரையிட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் இதற்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.