முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட வழக்கில் சென்னை திருவல்லிக்கேணி போலீசாருக்கு அதிரடி நிபந்தனைகளுடன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த திடீர் திருப்பம் ஆளுங்கட்சி வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
காவல்துறையினர் பதிவு செய்துள்ள இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் (FIR) தனது பெயரோ அல்லது தனது சகோதரர் அசோக்குமாரின் பெயரோ தற்போதைய நிலையில் இடம்பெறவில்லை என்பதை செந்தில் பாலாஜி அந்த கடிதத்தில் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். வழக்கில் பெயரே இல்லாத பட்சத்தில் தங்களை எந்த அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், புதிய சட்ட நடைமுறைகளின்படி தனக்கு 35 Clause (3) BNS பிரிவின் கீழ் முறையான நோட்டீஸ் முதலில் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கின் கீழ் தான் விசாரணைக்கு நேரில் ஆஜராகும் பட்சத்தில், அரசியல் பழிவாங்கும் நோக்கில் தங்களை வேறு எந்தப் புதிய வழக்கிலும் காவல்துறை திடீரென கைது செய்யக்கூடாது என்ற உறுதியை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்றும் அவர் கடுமையான நிபந்தனை விதித்துள்ளார். தான் ஒரு மக்கள் பிரதிநிதி மட்டுமல்லாமல், பல்வேறு தொழில்களைத் தொடர்ந்து நடத்தி வரும் ஒரு தொழிலதிபர் என்றும், சட்டத்திற்குப் பயந்து தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் அவர் தனது கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தான் ஆஜராகும் போதோ அல்லது வழக்கமான நிபந்தனை கையெழுத்திட வரும் போதோ, தனக்குத் தேவையான உரிய அவசர மருத்துவ வசதிகளை காவல்துறை முன்கூட்டியே செய்து தர வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் பெற்ற பிறகும், நேரில் விசாரணைக்கு ஆஜராவதில் செந்தில் பாலாஜி விதித்துள்ள இந்த புதிய நிபந்தனைகள் மற்றும் பிஎன்எஸ் சட்டப்பிரிவு குறித்த விளக்கங்கள் தற்பொழுது தமிழக அரசியல் களம் மற்றும் சட்ட வல்லுநர்கள் மத்தியில் ஒரு புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.





