செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்! தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2026 சட்டமன்ற தேர்தல் முடிந்து ஆட்சி அமைந்தாலும் தமிழ்நாட்டில் அரசியல் அதிரடிகள் ஓய்ந்தபாடில்லை. உத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம், சபாநாயகர் தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க ரூபாய் 35 கோடி பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகார் ஒட்டுமொத்த கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. இந்த குதிரை பேர வழக்கில் திருவல்லிக்கேணி போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால், நீதிமன்ற விசாரணையின் போது காவல்துறை தரப்பு வெளியிட்ட தகவல்கள் சாதாரண அரசியல் நகர்வு அல்ல, ஒரு மிகப்பெரிய ஆட்சி கவிழ்ப்பு சதிவலை என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்க்கும் மாஸ்டர் பிளானோடு, சபாநாயகர் தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக வாக்கு செலுத்த இந்த லஞ்சம் கொடுக்க முயன்றதாக காவல்துறை நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. குற்றச்சதி நடந்ததற்கான ஆரம்பக்கட்ட ஆதாரங்கள், ஹோட்டல் புக்கிங் மற்றும் இவர்களின் மொபைல் சிக்னல் டவர் லொகேஷன் என அனைத்தும் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகவும், இதில் ஹவாலா பணப் பரிமாற்றத் தொடர்புகளும் சந்தேகிக்கப்படுவதால் இவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் தரப்பு வாதிட்டது. இதனால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  “ரெண்டு எம்எல்ஏக்களையும் ராஜினாமா செய்ய சொன்னார் விஜய்!” அப்பட்டமாக அம்பலப்படுத்திய வைக்கோ: தமிழக அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை!

நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு, “எங்களுக்கும் இந்த பேரம் பேசப்பட்ட விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, போன் கால்களோ பண பரிமாற்ற ஆதாரங்களோ இல்லை” என திட்டவட்டமாக மறுத்தது. மேலும், வரவிருக்கும் கரூர் இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி பணியாற்றுவதைத் தடுப்பதற்காகவே அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது என்றும் வாதாடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், காவல்துறையின் எஃப்ஐஆரில் செந்தில் பாலாஜியின் நேரடிப் பங்கு குறித்து ஆரம்பத்தில் எதுவும் குறிப்பிடப்படாததைச் சுட்டிக்காட்டி கைதிலிருந்து தற்காலிக நிம்மதி அளித்தார்.

இருப்பினும், வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய இருவருக்கும் மிக கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, முன்ஜாமீன் பெற்றுள்ள இருவரும் மறுஉத்தரவு வரும் வரை தினமும் காலையிலும் மாலையிலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணை அதிகாரியின் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும். மேலும், போலீசாரின் இந்த குதிரை பேர வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி தீர்ப்பின் மூலம் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வந்த செந்தில் பாலாஜியின் கைது பயம் மற்றும் அரசியல் பரபரப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.