தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்க்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 8-ம் தேதி நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த நிலையில், முன்ஜாமீன் நிபந்தனையின்படி ரூ.25,000 ஜாமீன் தொகை மற்றும் உத்தரவாத நகலை (Surety) சமர்ப்பிப்பதற்காகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தனது வழக்கறிஞர்களுடன் இன்று நேரில் ஆஜரானார்.
ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் ரூ.35 கோடி முதல் ரூ.50 கோடி வரையிலும், இடைத்தரகராகச் செயல்பட்ட நபருக்கு ரூ.5 கோடி வரையிலும் பேரம் பேசப்பட்டதாகவும், இதற்காக ரூ.2 கோடிக்கும் அதிகமான ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மாத காலமாகத் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. இன்று நீதிமன்றத்தில் பிணை உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மறு உத்தரவு வரும் வரை அவர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆஜராகி கையெழுத்திடவுள்ளனர்.





