தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சூறாவளியைக் கிளப்பியுள்ள தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) ஆட்சிக் கவிழ்ப்புச் சதி வழக்கில், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு மர்ம நபருக்கு நேரடித் தொடர்பு இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது. த.வெ.க சட்டமன்ற உறுப்பினரிடம் (MLA) பேரம் பேசி கைது செய்யப்பட்ட நபர்களுடன் இந்த மர்ம நபர் ரகசியமாகத் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க அரசைச் சட்டவிரோதமாகக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் எம்.எல்.ஏ ஒருவரைத் தங்கள் பக்கம் இழுக்க ஒரு கும்பல் பல கோடி ரூபாய் பேரம் பேசியதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுத்த தனிப்படை போலீசார், பேரம் பேச முயன்ற முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சூழலில், கைதானவர்களின் செல்போன் அழைப்புகள் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்களைச் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அப்போது, கைதான கும்பல் சிங்கப்பூரில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நபருடன் வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் செயலிகள் மூலமாகத் தொடர்ந்து ரகசியமாகப் பேசி வந்தது தெரியவந்துள்ளது. த.வெ.க ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்ற சதித் திட்டத்தில் சிங்கப்பூரில் இருந்து கொண்டே அந்த நபர் போன் மூலம் முக்கியப் பின்னணி வேலைகளைச் செய்துள்ளார். “அந்த சிங்கப்பூர் நபர் யார்? அவர் எதற்காகப் பேரம் பேசச் சொன்னார்? இதன் பின்னணியில் இருக்கும் பெரும் புள்ளிகள் யார்?” என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த சதியின் முக்கிய பின்னணியாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரை போலீசார் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக, ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் நபர்களை மீண்டும் போலீஸ் காவலில் (Police Custody) எடுத்து விசாரிக்கப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதனால் அடுத்த சில நாட்களில் இந்த வழக்கில் அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





