“சில்க் ஸ்மிதாவை ஜெயித்தேன்!”: வைரலாகும் எஸ்.வி.சேகரின் நெகிழ்ச்சி பதிவு!

தென்னிந்தியத் திரைப்பட உலகில் பல தலைமுறைகளைக் கடந்தும் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளவர் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா. அவர் மறைந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட போதிலும், அவரது நடிப்பு, வசீகரம் மற்றும் திரையுலகப் பங்களிப்பு ஆகியவை இன்றும் ரசிகர்களால் தொடர்ந்து நினைவு கூரப்பட்டு வருகின்றன. வெறும் கவர்ச்சி நடிகையாக மட்டுமல்லாமல், பல முன்னணித் திரைப்படங்களில் தனது நேர்த்தியான குணச்சித்திர நடிப்பையும் வெளிப்படுத்தி முத்திரை பதித்தவர் சில்க் ஸ்மிதா.

இந்நிலையில், பிரபல மூத்த நடிகரும் நாடகக் கலைஞருமான எஸ்.வி.சேகர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், சில்க் ஸ்மிதாவுடன் தான் இணைந்து எடுத்த அரிய புகைப்படம் ஒன்றைப்பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்துடன் அவர் வெளியிட்டுள்ள சுவாரஸ்யமான தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது, நடிகைகள் மோகினி மற்றும் ரோகிணியுடன் தான் எடுத்த புகைப்படங்களைப் பார்த்த சில்க் ஸ்மிதா, “உங்கள் சிரிப்பு மிகவும் செயற்கையாக இருக்கிறது” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். அதற்குப் பதிலளித்த எஸ்.வி.சேகர், “நாம் இருவரும் இணைந்து சிரிப்பது போல் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வோம்; யாருடைய சிரிப்பு இயற்கையாக இருக்கிறது என்று ஒரு வார இதழ் வாயிலாக ரசிகர்களிடம் போட்டி வைப்போம்” எனச் சவால் விடுத்துள்ளார்.

அந்தச் சவாலுக்குச் சில்க் ஸ்மிதாவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, வார இதழ் ஒன்றில் அந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டு ரசிகர்களின் வாக்குகள் சேகரிக்கப்பட்டன. இந்த சுவாரஸ்யமான போட்டியில் வாக்குகள் அடிப்படையில் எஸ்.வி.சேகர் வெற்றி பெற்றார். போட்டியில் தோற்றபோதிலும், தான் ஒப்புக்கொண்டபடி மிக நேர்மையாகப் பரிசுப் பணத்தை எஸ்.வி.சேகருக்குச் சில்க் ஸ்மிதா அனுப்பி வைத்துள்ளார்.

திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பாக ஆடை வடிவமைப்பு மற்றும் ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றிய சில்க் ஸ்மிதா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்துத் தென்னிந்திய மொழிகளிலும் புகழின் உச்சத்தைத் தொட்டவர். புகழின் உச்சியில் இருந்தபோதே அவரது மறைவு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், எஸ்.வி.சேகர் பகிர்ந்துள்ள இந்த நினைவலைகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும் பேரன்பையும் ஏற்படுத்தியுள்ளது.