“ஆணவத்தின் உச்சம்… பெண்களுக்கு மரியாதை எங்கே?” – தமிழிசை சவுந்தரராஜன் காரசாரம்!

தமிழக அரசியலில் பெண்கள் நடத்தப்படும் விதம் மற்றும் சட்டப்பேரவைச் சூழல்கள் குறித்து முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் காரசாரமான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக காட்டும் அணுகுமுறை அவர்களின் ஆணவத்தின் உச்சத்தைக் காட்டுவதாக அவர் சாடியுள்ளார். தங்களின் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதை விடுத்து, இந்த கைது நடவடிக்கையை ஒரு ‘ஜோக்’ என்றும், விமர்சிப்பவர்களை ‘முட்டாள்களின் கூட்டம்’ என்றும் கூறுவதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களைப் பற்றித் தவறாகப் பேசுவதும், பின்னர் அதை வேறு திசைக்குத் திருப்புவதும் திமுகவிற்குப் புதிதல்ல என்று சுட்டிக்காட்டிய தமிழிசை சவுந்தரராஜன், இது கடந்த 75 ஆண்டுகளாகத் தொடரும் ஒரு மோசமான அணுகுமுறை என்று குற்றம் சாட்டினார். சத்தியவாணி முத்து, அனந்தநாயகி மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலம் தொட்டே பெண் தலைவர்கள் மீது தனிநபர் தாக்குதல்களையும், குடும்பப் பிரச்சனைகளையும், இழுத்து அடிப்பதை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது என்றார். தங்கள் கட்சியின் பெண் தலைவர்களான கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் மற்ற கட்சிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் உடனடியாகக் கண்டனம் தெரிவித்திருப்பார்கள் என்றும், ஆனால் தங்கள் சொந்தக் கட்சித் தலைவர்கள் பேசும்போது அமைதி காப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மீனவர் விவகாரத்தில் அரசுக்கு எதிரான அறிக்கை: அறிவாலயத்தை நோக்கி உதயநிதி ஸ்டாலின் தொடுத்த கணைகள்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கையை வரவேற்ற தமிழிசை, எந்தவொரு பெண்ணைப் பற்றித் தவறாகப் பேசினாலும் இத்தகைய கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு குறிப்பிட்ட பிரபலமான நபரைப் பற்றிப் பேசினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலை மாற வேண்டும் என்றும், அரசியல் மேடைகளில் பெண்களை இழிவாகப் பேசவே அனைவரும் பயப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காவிரிப் பிரச்சனை குறித்துப் பேச திமுகவிற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாகச் சாடினார். மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்தபோது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தவறியவர்கள் திமுகவினர் என்றார். 1974-இல் அன்றைய முதல்வர் கருணாநிதி எடுத்த முடிவுகளால் தான் காவிரி உரிமை தாரை வார்க்கப்பட்டது என்றும், கச்சத்தீவு விவகாரத்தைப் போல இதிலும் மாநில நலன் பலியிடப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில்தான் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டதாகவும், மேகதாது அணை திட்ட அறிக்கையைத் திருப்பி அனுப்பித் தமிழக உரிமைகளைப் பாரதிய ஜனதா கட்சி பாதுகாத்ததாகவும் அவர் எடுத்துரைத்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "அவுங்களுக்கு கொடுத்தீங்க.. அப்போ இவுங்களுக்கு?" முதல்வர் விஜய்க்கு அன்புமணி நறுக் கேள்வி!

சட்டமன்றப் பட்ஜெட் கூட்டத்தொடரைக் கவனத்தில் கொள்ளாமல், உதயநிதி ஸ்டாலின் கைதை ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியின், அர்ப்பணிப்பு போலச் சித்தரிக்க திமுக முயல்வதாகத் தமிழிசை சாடினார். சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்துத் தமிழ்நாட்டில் தேவையில்லாத பதற்றத்தை உருவாக்க திமுக திட்டமிடுவதாகக் கூறிய அவர், எதிர்க்கட்சியாகிவிட்டோம் என்பதை இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியாமல் பழைய ஆளுங்கட்சித் தோரணையில் அவர்கள் செயல்படுவதாகவும், மக்கள் இத்தகைய அரசியலைப் புறக்கணிப்பார்கள் என்றும் தனது பேட்டியில் அழுத்தமாகத் தெரிவித்தார்.