தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சரும் தவெக தலைவருமான சா. ஜோசப் விஜய் கூறிய குட்டிக்கதைக்கும், திமுக மீதான விமர்சனங்களுக்கும் திமுகவின் முக்கிய மூத்த நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்து மிகக் கடுமையான மற்றும் காரசாரமான பதிலடிகளைப் பட்டியலிட்டுள்ளார். மேடைகளிலும் அவையிலும் வசனம் பேசுவதை நிறுத்திவிட்டு, தவெக அரசு முதலில் தங்களது சொந்த நிர்வாகச் சீர்கேடுகளைக் கவனிக்க வேண்டும் என்று அவர் சாடியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் திமுக நிர்வாகி பேசியதாவது, “முதலமைச்சர் விஜய் எப்போது பார்த்தாலும் தேர்தல் பிரச்சாரம், ஆடியோ வெளியீட்டு விழா போலச் சட்டமன்றத்திலும் சம்பந்தமில்லாமல் அப்பாவை வைத்து ஒரு குட்டிக்கதை சொல்லியிருக்கிறார். அடுத்தவர்கள் அப்பாவைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், முதலில் உங்கள் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதைத் திரும்பிப் பாருங்கள். ‘என்னுடைய மகன் என் கட்டுப்பாட்டில் இல்லை, அவர் புஸ்ஸி ஆனந்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்’ என்று விஜய்யின் தந்தை மரியாதைக்குரிய எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களே வெளிப்படையாகப் பேட்டி கொடுத்தாரே, அதற்கு இதுவரை விஜய் ஏதேனும் விளக்கம் சொல்லியிருக்கிறாரா?
எதிர்க்கட்சித் தலைவர்கள் அவையில் சுட்டிக்காட்டியது போல, ‘கணவரைக் காணவில்லை’ என்று தவெக முக்கிய நிர்வாகி ஒருவரின் மனைவி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அப்பாவைத் தேடி மகனும் மகளும் தவித்து நிற்கிறார்கள். இதையெல்லாம் மறைக்கத்தான் விஜய் அடுத்தவர்களின் அப்பாவை இழுத்துக் கதை சொல்கிறார். ஆனால், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எப்படிப்பட்ட ஒரு சிறந்த மகன் என்பதற்கு, மாற்றுக்கட்சியான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களே ‘மகன் என்றால் மு.க.ஸ்டாலினைப் போல இருக்க வேண்டும்’ என்று சான்றளித்துள்ளார். எனவே, எங்களுக்கு அறிவுரை கூறுவதை முதலமைச்சர் விஜய் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இப்படி ஒரு டைவர்ஷன் பாலிடிக்ஸ் (Diversion Politics) மூலமாகவே ஆட்சியை நடத்திவிடலாம் என்று நினைத்தால் மக்கள் ஏமாற மாட்டார்கள். உங்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் 35 சதவீதம் பேர் மட்டும்தான், மீதமுள்ள 65 சதவீதம் பேர் உங்களது நிர்வாகத் திறமையின்மையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சினையாக இருக்கும் சட்டம் ஒழுங்கைச் சரிசெய்ய 6 மாத காலம் அவகாசம் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு புதிய திட்டத்தைத் தீட்டுவதற்குத்தான் அவகாசம் தேவையே தவிர, அன்றாட சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்கு அன்றேதான் தீர்வு காண வேண்டும். இன்று பெண் குழந்தை கொலை செய்யப்படுகிறது என்றால், அதற்கு இன்றுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர 6 மாதங்கள் பொறுத்திருக்க முடியாது.
தவெக மட்டுமே ஏதோ உத்தமமான, ஊழலற்ற ஆட்சி தருவது போலவும், மற்றவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள் என்பது போலவும் ஒரு பொய்யான பிம்பத்தை (Narrative) அமைக்க விஜய் முயற்சிக்கிறார். சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக உங்கள் மீது மத்திய அரசு தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. திரைப்படங்களில் நடிப்பதற்குப் பிளாக் மணி (Black Money) வாங்கிய விவகாரம், உங்கள் படங்கள் தியேட்டர்களில் பிளாக் டிக்கெட்டில் விற்று ஓடிய கதைகள் எல்லாம் இந்தத் தமிழ்நாட்டிற்கு நன்றாகத் தெரியும். இதையெல்லாம் செய்துவிட்டு ஏதோ காந்தி மகான் போல அவையில் நின்று வசனம் பேசுவது கதைக்கு உதவாது.
அவையில் நீங்கள் வாய் திறக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியதற்குக் காரணம், பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு என்ன நீதி கிடைக்கப் போகிறது, குற்றவாளிகளான உங்கள் தவெக நிர்வாகிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறது என்று கேட்பதற்குத்தான். ஆனால், உங்களது உயர்கல்வித் துறை அமைச்சரோ அரசுப் பள்ளியில் சினிமா பாட்டைப் போட்டுக்கொண்டு, பெண் குழந்தைகளைப் பொதுவெளியில் கேமராக்கள் முன்னிலையில் தவறான முறையில் தொட்டு ‘குட் டச், பேட் டச்’ (Good Touch, Bad Touch) என டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். பள்ளிப் பிள்ளைகளை வெயிலில் நிற்க வைத்து உங்களது சினிமா பாட்டைப் பாடச் சொல்வதை எதிர்த்துப் பெற்றோர்கள் பள்ளிகளை முற்றுகையிடும் காட்சிகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தவறுகளையெல்லாம் பேசத் துப்பில்லாமல், எல்லாவற்றையும் திமுக மீது திருப்பிவிட்டுத் தப்பித்துவிடலாம் என்று முதலமைச்சர் விஜய் நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது” என்று திமுக தரப்பில் மிக ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.





