“சென்னையைச் சுற்றும் விஜய்.. 5000 நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை!” – தவெக-வின் மெகா தேர்தல் பிளான்; முழு விவரம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய், இன்று (ஏப்ரல் 21, 2026) சென்னையில் மிகப்பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். காலை முதல் மாலை வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்வுகள், தலைநகர் சென்னையை அரசியல் ரீதியாகப் பரபரக்க வைத்துள்ளது.

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று மதியம் 12 மணிக்கு பாலவாக்கம் பகுதியில் இருந்து தனது ரோடு ஷோவை விஜய் தொடங்குகிறார். அங்கிருந்து திருவான்மியூர் நாகாத்தம்மன் கோவில் சந்திப்பு வழியாகப் பயணித்து, சைதாப்பேட்டை பனகல் மாளிகை வரை அவர் திறந்த வாகனத்தில் மக்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளார். இசிஆர் (ECR) மற்றும் தென் சென்னை பகுதிகளில் விஜய்க்கு உள்ள பெரும் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரச்சாரத்தைத் தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் பங்கேற்கத் தகுதியுள்ள 5,000 நிர்வாகிகளுக்கு ஏற்கனவே QR கோடு (QR Code) அடங்கிய டிஜிட்டல் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  அரியலூரில் பரபரப்பு! "தாங்க முடியலையே" என ஆவேசப்பட்ட திருமாவளவன்; தொண்டர்கள் வெளியிட்ட மீம்ஸ்!

“தேர்தல் ஆணையத்தின் விதிகளைத் தொண்டர்களும், நிர்வாகிகளும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டும்” என என். ஆனந்த் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், சென்னையில் விஜய் மேற்கொள்ளும் இந்த அதிரடி நகர்வு, மற்ற அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களைக் கவரும் வகையில் விஜய்யின் இந்த ரோடு ஷோ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment