திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) புதிய பாலக்க மண்டலி (அறங்காவலர் குழு) கூட்டம் தலைவர் பி.ஆர். நாயுடு மற்றும் முதன்மை செயல் அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா தலைமையில் நடைபெற்றது. இதில் திருமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்களின் நலன் கருதிப் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருமலைக்கு வரும் பக்தர்களுக்காக எல்.ஐ.சி (LIC) நிறுவனம் மூலம் பிரத்யேக ஆயுள் காப்பீட்டு வசதியைத் தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் திருமலைக்கு வரும் பக்தர்கள் அங்கு எதிர்பாராதவிதமாக இயற்கை மரணமடைய நேரிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு ₹2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இத்திட்டத்திற்காகத் தேவஸ்தான நிதியில் இருந்து எல்.ஐ.சி நிறுவனத்திற்கு ₹2.12 கோடி பிரீமியமாக செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்திற்கான காப்பீட்டுத் தொகை ₹3 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இத்துடன் திருமலை ஸ்ரீவாரி லட்டு பிரசாத தயாரிப்பை விரைவுபடுத்தக் கூடுதலாக 400 ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்க அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தேவஸ்தானத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் 48 ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலின் கொடிமரம் (த்வஜஸ்தம்பம்) மற்றும் பலிபீடத்திற்கு ₹17.05 கோடி மதிப்பில் தங்க முலாம் பூசும் திட்டத்திற்கும் தேவஸ்தானக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாண்டின் வருடாந்திர பிரம்மோற்சவ விழாக்கள் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 23 வரை சாலக்கட்ல பிரம்மோற்சவமாகவும், அக்டோபர் 12 முதல் அக்டோபர் 20 வரை நவராத்திரி பிரம்மோற்சவமாகவும் மிக விமரிசையாக நடைபெறவுள்ளன. செப்டம்பர் 15 அன்று ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்குப் பட்டு வஸ்திரங்களைச் சமர்ப்பிக்கவுள்ளார். பக்தர்களின் பாதுகாப்பிற்கும் வசதிகளுக்கும் முழு முன்னுரிமை அளித்து அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகத் தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.





